தியன் சுவா சட்ட நடவடிக்கைகள் முடியும் வரையில் எம்பியாக இருப்பார், நாடாளுமன்ற துணைத் தலைவர் கூறுகிறார்

 

Tianremainsmpபத்து நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தியன் சுவா அவர் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பு சம்பந்தமான வழக்கு முடிவடையும் வரையில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருப்பார்.

ஒரு போலீஸ் அதிகாரியை அவமதித்ததற்காக தியன் சுவாவுக்கு பெட்டாலிங் ஜெயா செசன்ஸ் நீதிமன்றம் இன்று ரிம3,000 அபராதம் விதித்தது. இது குறித்து கருத்துரைத்த நாடாளுமன்ற மக்களவைத் துணைத் தலைவர் ரோனல்ட் கியான்டி, தியன் இன்னும் பெடரல் உச்சநீதிமன்றம் வரையில் மேல்முறையீடு செய்ய முடியும் என்றார்.

தியன் உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழக்கமாட்டார். அவரது வழக்கு சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிவுற்ற பின்னர், அவர் குற்றவாளி என்பது நிலைநிறுத்தப்பட்டால், அப்போதுதான் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை இழப்பார் என்று துணைத் தலைவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பெர்னாமாவிடம் கூறினார்.

பெடரல் அரசமைப்புச் சட்டப்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு ஓர் ஆண்டிற்கு மேற்பட்ட சிறை தண்டனை அல்லது ரிம2,000 அபராதம் விதிக்கப்பட்டால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழப்பார்.