ஜினிவாவில் அமைந்துள்ள உலக தேவாலய மன்றம், கடத்தப்பட்ட பாதிரியார் ரேய்மண்ட் கோ-வைக் கண்டுபிடிக்க விரைந்து செயல்பட வேண்டுமாய் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
புதன்கிழமை அம்மன்றத்தின் பொதுச் செயலர் ஒலாவ் பிக்ஸே ட்வைட் எழுதிய திறந்த மடலில் அக்கடத்தல் சம்பவம் மிகுந்த “கவலையைக் கொடுத்திருப்பதாக”வும் அது சிறுபான்மை சமயத்தாரிடையே எதிர்மறையான தாக்கத்தை உண்டுபண்ணும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
“பாதிரியார் கோ-வின் கடத்தல் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு கொடூரச் செயல் எனத் தெரிகிறது. அது ஒரு பயங்கரவாதச் செயலுக்கு இணையானது என்றும் கூறப்பட்டுள்ளது.
“அவர் கடத்தப்பட்டதிலிருந்து இதுவரை அவரது பாதுகாப்பு குறித்தும் அவரது இருப்பிடம் குறித்தும் அவரின் குடும்பத்தாருக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை, யாரும் இதுவரை பிணைப்பணம் கோரியதாகவும் தெரியவில்லை”. ட்வைட்டின் கடிதம் சேனல் நியுஸ்ஏசியா வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
கோ, பிப்ரவரி 13-இல் பெட்டாலிங் ஜெயாவில் கடத்தப்பட்டார். அவரைக் கடத்தியவர் யார், எதற்குக் கடத்தினர், இப்போது பாதிரியார் எங்கு உள்ளார் என இதுவரை அச்சம்பவம் தொடர்பில் எதுவும் தெரியாதிருந்தது. நேற்று அதில் ஒரு மாற்றம்.
கடத்தல் தொடர்பில் போலீசார் ஒரு ஆடவரைக் கைது செய்துள்ளனர், அந்நபர் பிணைப்பணம் கேட்டு பாதிரியாரின் குடும்பத்தாரைத் தொடர்புகொண்டபோது பிடிபட்டார்.