சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிசுக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்குமிடையில் திட்டமிடப்பட்டுள்ள விவாதத்துக்கும் அரசாங்கத்துக்கும் “சம்பந்தமில்லை” என இரண்டாவது நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி இன்று கூறினார்.
நிதி அமைச்சின்கீழ் உள்ள 1மலேசியா மேம்பாட்டு நிறுவன விவகாரங்கள் குறித்து அவ்விருவரும் விவாதமிடுவதை அவர் ஒப்புக்கொள்கிறாரா என்று வினவியதற்கு அவ்விவகாரம் குறித்து “ஏற்கனவே நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு விட்டது” என அமைச்சர் கூறினார்.
“தலைமைக் கணக்காய்வாளர், பொதுக் கணக்குக் குழு அறிக்கை தயாரித்திருந்தனர், நாடாளுமன்றத்தில் விலாவாரியாக பேசப்பட்டது, எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கப்பட்டது.
“அப்படியிருக்க,, அவ்விருவரும் அதன்மீது விவாதம் நடத்த விரும்பினால் அப்படியே செய்யட்டும்.
“அது அவர்களின் தனிப்பட்ட விவகாரம், அரசாங்கத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை”, என ஜொஹாரி கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
1எம்டிபி குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக பேசப்பட்டதாக ஜொஹாரி கூறிக்கொண்டாலும், 1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை இன்னமும் அதிகாரத்துவ இரகசிய சட்டத்தின்கீழ் இரகசியமாகத்தான் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவும் கடந்த மக்களவைக் கூட்டத்தில் இனி யாரும் 1எம்டிபி விவகாரம்மீது நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூடாது என்று தடை விதித்தார். 1எம்டிபி- இலிருந்து கையாடப்பட்ட பணத்தைக்கொண்டு வாங்கப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித் துறை அமெரிக்காவில் வழக்கு தொடுத்து அது நடந்து கொண்டிருப்பதால் அவர் அத்தடையை விதித்தார்.