கருணைமிக்க செயல் கைருலைப் பிரபலமாக்கியுள்ளது

ashokமுகம்மட்  கைருலுக்கு   வயது  20.  ஒரு   வழக்குரைஞர்    அலுவலகத்தில்   பொருள்களை    உரிய   இடத்துக்குக்   கொண்டு   சேர்க்கும்   டிஸ்பேஜ்   வேலை    செய்து   வருகிறார்.  சாதாரண   வேலை    செய்யும்   ஒரு   சமானியர்.   ஆனால்,  அவரது   கருணை   உள்ளம்   இன்று   அவரைச்    சமூக   வலைத்தளங்களில்      பிரபலமாக்கியுள்ளது.

அப்படி     என்ன    செய்து     விட்டார்    கைருல்?  வீடுவாசலில்லாமல்     சுற்றிக்கொண்டிருந்த   ஒருவருக்கு   முடிவெட்டிக்கொள்ள   உதவினார்.

பூ……..இவ்வளவுதானா    என்று   கேட்கத்    தோன்றும்.   ஆனால்,   எத்தனை    பேருக்கு     அப்படி   ஒரு    செயலைச்   செய்ய  வேண்டும்     என்ற   எண்ணம்   வரும்.

கைருலும்   அச்செயலைப்   பெரிதாக    நினைக்கவில்லை.   முகநூலில்   அவர்   இட்ட   பதிவு    இணையத்தளத்தில்    வைரலாகும்   என்று   அவர்    நினைக்கவே   இல்லை.

மார்ச்  6-இலிருந்து   அப்பதிவு   16,721   தடவை    பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

கைருலைத்   தொடர்புகொண்டபோது     அவர்   தம்   அனுபவத்தை    விவரித்தார்.

இரண்டாண்டுக்   காலமாக   கைருல்,   பரட்டைத்    தலையுடனும்   காடுபோல்   மண்டிக்கிடக்கும்   தாடி    மீசையுடனும்    சுற்றிக்  கொண்டிருந்த   அசோக்    என்னும்   அந்த    ஆடவரைக்  கவனித்து   வந்திருக்கிறார்.  ஆனால்,  பேசியதில்லை,   அண்மையில்தான்     அவருடன்   பேசத்    தொடங்கினார்.

“அவருடன்    நான்   பேசிக்கொண்டிருப்பதைப்   பலரும்   ஏற இறங்கப்   பார்ப்பார்கள்”,  என்றார்   கைருல்.

முடியை  வெட்டிக்கொள்ளச்  சொன்னபோது    அசோக்    அதற்கு  ஒப்புக்கொள்ளவில்லை.  விடாமல்    வற்புறுத்தவே    ஒரு    வழியாக   உடன்பட்டார்.
“அவர்  முடிவெட்டிக் கொள்ளும்    படங்களைப்     பதிவிட்டதும்    அவை   இப்படி   வைரலாகும்    என்று   நான்  நினைக்கவே   இல்லை”,  என்று   கைருல்   கூறினார்.

அசோக்குக்கு  ஒருவர்   வேலை   கொடுக்க    முன்வந்துள்ளார்,  இனி,   அவருடன்தான்     அவர்   வசிக்கப்   போகிறார்.

அசோக்கிடம்   பேசியதிலிருந்து   அவர்,   கோலாலும்பூருக்கு     வருவதற்குமுன்    சிங்கப்பூரில்     ஒரு  பொறியாளராக    வேலை     செய்திருக்கிறார்   என்பதைத்   தெரிந்து  கொண்டதாக   கைருல்    சொன்னார்.

அவரைப்   பற்றி   மேல்விவரம்   தெரிவிக்க   கைருல்   விரும்பவில்லை.    சமூக  வலைத்தளங்களில்   பிரபலமாகி    வருவதை    அசோக்    அறிய   மாட்டார்    என்றும்   அவர்    தெரிவித்தார்.

அது    அவருக்குத்   தெரியாமல்   இருப்பதே   நல்லது,   இப்போது   அவருக்கு  ஒரு   புது   வாழ்க்கை  கிடைத்துள்ளது.  இந்த   வாழ்க்கையை    அவர்   வாழட்டும்  என்கிறார்  கைருல்.

இப்போது   தனக்கு   மேன்மேலும்    நற்செயல்கள்   புரிய   வேண்டும்    என்ற    எண்ணம்   வருவதாகக்  கூறிய   கைருல்      அதற்கு   ஊக்கம்   அளித்தவர்  அசோக்தான்  என்றும்   குறிப்பிட்டார்.