லெம்பா சுபாங் 1 பொது வீடமைப்புத் திட்ட(பிபிஆர்)க் குடியிருப்பாளர்கள், தங்கள் பகுதியில் கூட்டரசு அரசாங்கம் “அத்துமீறி நுழைந்துள்ளதாக” சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“மாநில மக்களின் நலனுக்குப் பொறுப்பேற்க வேண்டிய சிலாங்கூர் எம்பி இப்படி மரியாதைக் குறைவாக பேசக்கூடாது”,என லெம்பா சுபாங் 1 மேம்பாட்டுக்குழுத் தலைவர் யூசுப் ஹனிப் இன்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கிளானா ஜெயா அம்னோ தொகுதித் தலைவருமான யூசுப்புடன் பிபிஆர் குடியிருப்பாளர்கள் 30 பேரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அந்த பிபிஆர் திட்டத்துக்குப் பொறுப்பான சிலாங்கூர் அரசு ஒன்பது மாதங்களாக அப்பகுதியை எட்டிப் பார்த்ததே இல்லை என்றாரவர்.
பிபிஆர் நிர்வாகத்தை நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சிடம் ஒப்படைத்தால் அது சிறப்பாக பராமரிக்கும் என்று குடிருப்பாளர்கள் நினைப்பதாக அவர் சொன்னார்.
“அஸ்மின் எம்பி ஆனதிலிருந்து இப்பகுதிக்கு வந்ததே இல்லை”, என்றார்.
அஸ்மின் ஏற்கனவே, நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு பெட்டாலிங் ஜெயா மாநகராண்மைக் கழக அனுமிதியின்றி லெம்பா சுபாங் பிபிஆர் பகுதியில் “அத்துமீறி” நுழைந்து நிர்வாக அலுவலகம் ஒன்றை அமைத்துக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.