சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டவர் சிறைச்சாலைக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக வழக்கு

case35-வயது   நிரம்பிய   முன்னாள்  வாகன   ஓட்டுனர்   ஒருவர்,  சிறைச்சாலைத்   துறையும்   அரசாங்கமும்   கவனக்குறைவாக  இருந்ததாகவும்   கடமையைச்   சரிவரச்  செய்யத்   தவறியதாகவும்     குற்றஞ்சாட்டி    வழக்கு   தொடுத்துள்ளார்.

சிறையில்  ஐந்து   கைதிகள்   தன்னைத்   தாக்கியதற்கும்   அதன்  விளைவாக  முதுகெலும்பு   இடம்பெயர்ந்து   நிரந்தர  முடமானதற்கும்   அதுவே  காரணம்   என  கிள்ளானைச்   சேர்ந்த    வி.சசிதரன்   கூறிக்கொண்டார்.

போதைப்பொருள்   குற்றத்துக்காக    சிறை   சென்ற   சசிதரன்,   சிறைத்துறை   அதிகாரிகள்   ஐவர்,   சுங்கை  பூலோ   சிறை   இயக்குனர்,   சிறைத்துறை    தலைமை   ஆணையர்,   உள்துறை   அமைச்சு,   அரசாங்கம்    ஆகியோரை   எதிர்வாதிகளாகக்   குறிப்பிட்டுள்ளார்.

டயிம்  அண்ட்  காமனி   நிறுவனம்  சசிதரனுக்காக    கோலாலும்பூர்   உயர்   நீதிமன்றத்தில்    வழக்கைப்   பதிவு   செய்தது.

சசிதரன்   2015,   நவம்பர்    23-இலிருந்து    டிசம்பர்  1வரை   சிறையில்   இருந்ததாக   அவரது   அறிக்கையில்   கூறினார்.

டிசம்பர்  1,   மாலை   மணி   4   அளவில்,   ஒரு  கைதி   இன்னொரு  கைதியின்  உணவைத்   திருடுவதைக்  கண்டு   சசிதரன்  ஏதோ  சொல்லப்    போக   ஐவர்   சேர்ந்து    இவரைத்   தாக்கியுள்ளனர்.

இவர்  கீழே  விழுந்தார்.  விழுந்ததும்   ஒரு  கைதி   இவரின்  கழுத்தின்  பின்பகுதியில்    ஓங்கி  மிதித்திருக்கிறான்.  எலும்பு  முறிவதுபோன்ற  சத்தம்.  சசிதரன்    நினைவிழந்தார்  என்று   அவ்வறிக்கை   கூறியது.

மூன்று  மணி  நேரம்  கழித்து     சிறை   அதிகாரிகள்    சுங்கை  பூலோ  மருத்துவமனைக்குச்   சிகிச்சைக்காகக்  கொண்டு   சென்றிருக்கிறார்கள்.  ஒரு  மாதம்   தீவிர  கவனிப்புப்   ;பிரிவில்   வைத்து   அவருக்குச்   சிகிச்சை   அளிக்கப்பட்டது.

இப்போது   சசிதரனால்   மலம்  போவதைக்   கட்டுப்படுத்த   இயலுவதில்லை,  தோலில்   தொடு  உணர்வு  இல்லை,   பாலியல்  தேவைகளை   நிறைவேற்றிக்கொள்ள  இயலாது,   கனமான   பொருள்களைத்   தூக்க  வியலாது.