முழு விவரமும் தெரியாமல் 1எம்டிபிமீது நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறியுள்ள இரண்டாம் நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனியைச் சாடிய பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா, அரசாங்கம்தான் முழு விவரம் அறிய எந்த முயற்சியும் செய்வதில்லையே என்பதைச் சுட்டிக்காட்டினார்.
“எவர்மீதும் குற்றம் சாட்டுமுன் முழுக் கதையும் தெரிவது அவசியம்தான். அதேவேளை குற்றச் செயலைப் புலனாய்வு செய்வதில் ஒருமித்த முயற்சியும் தேவை.
“மலேசியாவில் இன்றைய நிலையில் அது இல்லை. மலேசியாவில் நிகழ்ந்துள்ள குற்றச் செயல்களைப் புலனாய்வு செய்யும் முயற்சி அறவே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
நேற்று, ஜொஹாரி என்ன தவறு நடந்தது என்பதை பிஏசி(பொதுக் கணக்குக் குழு), ஏஜி (தலைமைக் கணக்காய்வாளர்) ஆகியோரால்கூட துல்லியமாகக் குறிப்பிட இயலவில்லை என்று கூறியிருந்ததாக த எட்ஜ் நிதியியல் ஏடு அறிவித்திருந்தது குறித்து புவா இவ்வாறு கருத்துரைத்தார்.
எரியும் கொள்ளியை எடுத்து முதுகு சொரிவார்களா என்ன???? முழுப்பூசணிக்காயையும் சோற்றில் மறைப்பதில் வல்லவர்களாயிற்றே!!!!
குற்றவாளியிடம் இருந்து உண்மை வருமா?