கிட் சியாங்: பாஸ் தனித்து போட்டியிட்டு பெரும் வெற்றி பெற முடியாது

 

kitsiangpasalonenoபாஸ் கட்சி தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு பெரும் வெற்றி கண்டதாக வரலாறு இல்லை. அது இதர முக்கிய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஒத்துழைத்தால் அல்லது ஒரு கூட்டணியில் உறுப்பியம் பெற்றிருந்தால் பெரிய வெற்றி பெற முடியும்.

பதிவேடுகளின் தகவல்படி பாஸ் தனித்துப் போட்டியிட்டால் அது 13 அல்லது அதற்கும் குறைவான நாடாளுமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.

இதற்கு மாறாக, பாஸ் இதர எதிர்க்கட்சிகளுடன், டிஎபி உட்பட, ஒத்துழைத்த போது அது மிக அதிகப்பட்டியான இருக்கைகளை வென்றது என்றாரவர்.

1959 ஆம் ஆண்டிலிருந்து, மலேசியாவின் தேர்தல் வரலாற்றில் பாஸ் தனித்து போட்டியிட்ட போது அது 13 நாடாளுமன்ற இருக்கைகளை மட்டுமே வென்றுள்ளது.

பாஸ் 1999, 2008 மற்றும் 2013 பொதுத் தேர்தல்களில் மிக அதிகமான இருக்கைகளில் வெற்றி கண்டது. 1999 இல் அது பாரிசான் ஆல்டர்னெட்டிப்பின் ஓர் அங்கமாக இருந்தது. 2008 இல் டிஎபி மற்றும் பிகேஆருடன் பன்முகப் போட்டிகளை அது தவிர்த்தது. 2013 இல் பாஸ் கட்சி பக்கத்தான் ராக்யாட் உறுப்பினராக இருந்தது என்று கிட் சியாங் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

ஆனால், இப்போது பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வேறு திட்டங்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது என்றாரவர்.

இப்போது ஹாடி யார் அரசாங்கத்தை அமைப்பது என்பதைத் தீர்மானிப்பவராக இருக்க விரும்புகிறார். எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் ஐந்து மாநிலங்களையும் 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றும் என்று அவர் கூறியிருப்பதை கிட் சியாங் குறிப்பிட்டார்.

பாஸ் ஐந்து மாநிலங்களையும் 40 நாடாளுமன்ற இருக்கைகளையும் கைப்பற்றுவது இருக்கட்டும். அது கிளந்தான் மாநிலத்தில் அதன் ஆட்சியை தற்காக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என்றாரவர்.