சிலாங்கூர் அரசின் ஸ்கிம் மிஸ்ரா உசியா இமாஸ்(எஸ்எம்யுஇ) திட்டத்திலிருந்து பணம் கையாடப்பட்டிருப்பதாக சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் குற்றம் சாட்டியதை அடுத்து டமன்சாரா உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் இயோ பீ பின் இன்று எஸ்எம்யுஇ கோப்புகளைக் ஊடகங்களிடம் காண்பித்தார்.
“ஜமாலின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். இதோ ரசீதுகள், ஆவணங்கள். நாங்கள் ஒளிப்பதற்கு எதுவுமில்லை”, என இயோ இன்று டமன்சாரா உத்தாமாவில் அவரது சேவை மையத்தில் கூறினார்.
எஸ்எம்யுஇ என்பது சிலாங்கூர் அரசு அளிக்கும் இறப்பு உதவி நிதி.
குடும்பத்தில் உள்ள ஒருவர் இறந்து விட்டால் அக்குடும்பத்தார் தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் உதவிக்கு விண்ணப்பிக்கலாம். அவர் இறுதிச் சடங்குகளுக்கு அவசர உதவியாக ரிம1,000 வழங்குவார். எஞ்சிய ரிம1,500-ஐ மாவட்ட அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இயோ, 21 கோப்புகளைக் காண்பித்தார். அக்கோப்புகளில் 2013-இலிருந்து ரிம1,000 பெற்றுக்கொண்டவர் கையொப்பங்களுடன் கூடிய ரசீதுகள் இருந்தன. இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழ்களும் இணைக்கப்பட்டிருந்தன.
இதில் கணக்குக் கேட்கும் ஜமாலுக்கு ஊழல் நிரம்பிய 1மலேசியா மேம்பாட்டு நிதி நிறுவன(1எம்டிபி) த்திடமும் இதேபோல் கேட்கும் துணிச்சல் உண்டா என்று டிஏபி பிரதிநிதியான இயோ வினவினார்.