ஜோகூர் , பெங்கேராங்கில் ரிம31 பில்லியன் செலவில் சவூதி அராம்கோ நிறுவனத்துடன் கூட்டாக மேற்கொள்ளப்படும் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் முயற்சி எனக் குறைகூறப்பட்டுள்ள வேளையில், பெட்ரோனாஸ் அத்திட்டத்தைத் தற்காத்துப் பேசுகிறது.
பெட்ரோனாசை “அக் கூட்டுத்திட்டத்தில் ஈடுபடுமாறு யாரும் கட்டாயப்படுத்தவில்லை” என்று பெட்ரோனாஸ் குழும செயல்முறை உதவித் தலைவர் முகம்மட் அரிப் மக்மூட் கூறியதாக மலாய் மெயில் அறிவித்துள்ளது. அராம்கோ போன்ற ஒரு பங்காளியைத்தான் பெட்ரோனாசும் நீண்ட நாளாகத் தேடிக் கொண்டிருந்தது.
“யார் எங்களைக் கட்டாயப்படுத்தியிருக்க முடியும்? நாங்களே ஒரு பங்குதாரரைத்தான் தேடிக் கொண்டிருந்தோம்.
“ரபிட்டை நாங்கள் ஒன்றும் விற்றுவிடவில்லை. இது 50-50 பங்காளித்துவம்”, என்று முகம்மட் அரிப் கூறினார்.
2014-இலிருந்தே பெட்ரோனாசுக்கும் அராம்கோவுக்குமிடையில் பேச்சு நடந்து வந்திருப்பதாக அவர் சொன்னார்.
“அராம்கோவுடன் பங்கு சேர்வது என்பது நேற்று செய்யப்பட்ட முடிவு அல்ல”, என்றாரவர்.
பெட்ரோனாசின் உயர் அதிகாரிகளுக்கு அராம்கோவுடன் கூட்டுத்திட்டத்தில் ஈடுபடுவதில் விருப்பமில்லை என்றும் அவர்கள் அத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்றும் கூறப்படுவதை முகம்மட் அரிப் நிராகரித்தார்.