ஹாடியின் மசோதவை நாடாளுமன்றம் விவாதிப்பலிருந்து தடுத்து நிறுத்த நீதிமன்றம் செல்கிறார் முன்னாள் துணைப் பிரதமரின் மகன்

 

Act355unconstitutionalஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 1965 (சட்டம் 355) க்கு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தாக்கல் செய்திருந்த மசோதாவை அரசாங்கம் அதனுடைய மசோதாவாக ஏற்றுக்கொள்ளாது என்று பிரதமர் நஜிப் அறிவித்திருக்கிறார். ஆனால், அந்த மசோதா விவாதிக்கப்படுமா, இல்லையா என்று முடிவு செய்யும் பொறுப்பு மக்களவைத் தலைவரிடம் விடப்பட்டுள்ளது.

இதனிடையே, முகமட் தாபிக் இஸ்மாயில், முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மானின் மகன், ஹாடி தாக்கல் செய்துள்ள மசோதா அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று பிரகடனம் செய்யக் கோரும் மனு ஒன்றை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று பதிவு செய்துள்ளார்.

மக்களவைத் தலைவர் பண்டிகர் மற்றும் அவையின் செயலாளர் ரோஸ்மெ ஹம்ஸா ஆகியோரை தாபிக் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிட்டுள்ளார்.

ஹாடியின் மசோதா மக்களவையின் நிறைநிலை விதிகளுக்கு ஒத்திருக்கவில்லை என்று குறிப்பிட்ட தாபிக், இத்திருத்தங்கள் மலேசியர்கள் அனைவருக்கும் சமநிலை உத்தரவாதம் அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 8 ஐ மீறியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

மேலும், இந்த மசோதா தேசியக் கொள்கையைப் பாதிக்கும் என்பதால், இது முதலாவதாக ஆட்சியாளர்கள் மாநாட்டுடன் கலந்தாலோசிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தாபிக் வாதிடுகிறார்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 38 க்கு ஏற்ப ஹாடியின் மசோதா ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆலோசனை நடத்தப்படவில்லை என்று தாபிக் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பத்தை மலேசியாகினி கண்டுள்ளது.

இன்று பின்னேரத்தில் தாபிக்கின் மனுவை அவரது வழக்குரைஞர் ரோஸ்லி டாலான் நீதிமன்றத்தில் பதிவு செய்தார்.