இன்று நாடாளுமன்றத்தில் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கியுடின் சட்டம் 355 திருத்தங்கள் மசோதாவுக்கான அவரது ஆதரவு பேச்சை முடித்தவுடன், மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா இந்த சட்ட திருத்தங்கள் மீதான விவாதம் அடுத்த நாடாளுமன்ற தொடர்கூட்டத்தில் தொடரும் என்று அறிவித்தார்.
பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் (சட்டம்355) பற்றிய திருத்தங்கள் மசோதாவை வாசிக்குமாறு மதியம் மணி 12 க்கு ஹாடியை அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா அழைத்தார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய ஆட்சேபங்கள் மற்றும் கேள்விகள் மணி 12.40 வரையில் தொடர்ந்தன.
அதன் பின்னர், ஹாடி அவரது உரையைத் தொடங்கி பிற்பகல் மணி 2. 25 க்கு முடித்தார். ஹாடியின் உரைக்கு ஆதரவு தெரிவிக்கும் உரையை தாக்கியுடின் மணி 2.25 க்கு தொடங்கி மணி 3.55 க்கு முடித்தார்.
தாக்கியுடின் அவரது நீண்ட உரையில் ஷரியா சட்டத்தின் வரலாற்றை புரட்டிப் போட்டதுடன் சட்டம் 355 க்கான திருத்தங்களுக்கும் ஹூடுட்டிற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.
“அது ஹூடுட்டோ இல்லையோ, அதற்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை, அவர்கள் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை”, என்று தாக்கியுடின் கூறினார்.
கிளந்தான் மாநிலத்தின் ஹூடுட் சட்டம் முஸ்லிம் அல்லாதவர்களைப் பாதிக்காது என்று தெளிவாகக் கூறியிருப்பதாக அவர் மேலும் கூறினார்.