பிகேஆர்: ஜிஎஸ்டி-க்கு மக்கள் பலிகடா ஆக்கப்பட்டனர்

gstஆளும்  பிஎன்  அரசாங்கம்   பொருள்,  சேவை   வரி(ஜிஎஸ்டி)-யைக்  கொண்டுவந்து   மக்களைப்  பலிகடா  ஆக்கியுள்ளது    என  பகாங்  பிகேஆர்  கூறுகிறது.

“ஜிஎஸ்டிதான்   நாட்டைக்   காத்தது     என்று   துளியும்   வெட்கமின்றிக்  கூறிக்கொள்ளும்   அனைத்துலக  வாணிக,  தொழில்  அமைச்சர்  முஸ்தபா  முகம்மட்,  நாட்டின்  நிதிப்  பிரச்னைகளுக்குக்  காரணமான   இரண்டு   முக்கிய   விவகாரங்களுக்கு  அரசாங்கத்தால்   தீர்வு  காண  முடியாமல்  போனதை  மறைத்து  விட்டார்.

“முதலில்   மோசடித்தனங்களும்   ஊழலும்.  அவற்றால்   நாட்டின்  செலவினம்தான்  அதிகரித்ததே  தவிர   மக்கள்   எந்த   நன்மையும்  அடையவில்லை.

“இரண்டாவதாக,  ஏற்றத்தாழ்வைச்  சரி   செய்திருக்கக்  கூடிய    வரிக்  கொள்கைகள்  தோல்வியுற்றது”,  என   பகாங்  பிகேஆர்  துணைத்   தலைவர்   அஹ்மட்  நிஜாம்   கூறினார்.

இதற்குமுன்பு   முஸ்தபா,  உலகில்   எண்ணெய்  விலை  குறைந்து   வந்ததைச்  சுட்டிக்காட்டி  ஜிஎஸ்டி   மட்டும்  இல்லையென்றால்   நாடு   பெரும்   பிரச்னையில்  சிக்கிக்  கொண்டிருக்கும்    என்றார்.

ஜிஎஸ்டி,   வணிகர்களுக்குக்  கணக்குவழக்குகளை   முறையாக   வைத்துக்கொள்ள   வேண்டும்    என்ற  ஒழுக்கத்தைக்  கற்றுத்   தந்துள்ளதாகவும்   குறிப்பிட்டார்.

ஆனால்,     வணிகர்கள்   வரி   செலுத்துவதைத்  தவிர்த்து  வந்தார்கள்  என்றால்   அதற்கு   அவர்களை  மட்டுமா   குற்றம்   கூறுவது.      அம்னோ/பிஎன்   அரசாங்கம்   சட்டத்தை  அமல்படுத்தத்   தவறியது.  அதுதான்   காரணம்   என்று  அஹ்மட்   கூறினார்.

“முன்பிருந்த   விற்பனை  மற்றும்   சேவை (எஸ்எஸ்டி)  வரி  தொடர்பான   சட்டவிதிகளைச்  சரிவர     அமல்படுத்தத்   தவறிய   அரசாங்கம்   அதற்குப்  பதிலாக   ஜிஎஸ்டி-யைக்  கொண்டு  வந்து   மக்களைப்  பலிகடா   ஆக்கியுள்ளது”,  என்றார்.