பினாங்கு சட்டமன்றத்தில் ஷாபுடினை கண்டிக்கும் தீர்மானம்

 

LGEmotiontocodemnதாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாபுடின் யாகயாவைக் கண்டிக்கும் தீர்மானம் பினாங்கு சட்டமன்றத்தில் மே மாதம் தாக்கல் செய்யப்படும் என்று பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண் கற்பழித்தவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்று நாடாளுமன்றத்தில் கூறிய ஷாபுடின் பற்றி பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு ஏதுவாக இது செய்யப்படுகிறது என்றாரவர்.

பெண்கள் சினமடைந்துள்ளனர். இந்த தீர்மானம் கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு வழிகோலும் என்று நம்பப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

“பெண்களை நேசிக்கும், மதிக்கும் மற்றும் பாதுகாக்கும் மாநில அரசு என்ற முறையில் நாங்கள் இதனைச் செய்கிறோம்”, என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“ஷாபுடினுக்கு எதிராக பிஎன் மேல்மட்ட தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டது குறித்து நாங்கள் வருத்தப்படுகிறோம். கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்களை அவர் மதிக்கவில்லை. அதைவிட மோசமானது, கற்பழிப்பு குற்றத்தை அவர் கடுமையானதாகக் கருதாமல் இருப்பது”, என்றார் லிம்.

சட்டமன்றத்தில் மாநில எதிரணித் தலைவரும் பினாங்கு வனிதா அம்னோ தலைவருமான ஜஹாரா ஹமிட், ஷாபுடினின் கருத்து மீதான அவரது நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் லிம் கூறினார்.

“இது வரையில் ஷாபுடினை அவர் கண்டிக்கவில்லை, மாறாக அவருக்கு ஆதரவாக இருக்கிறார். அவர் ஒரு பெண்”, என்றார் லிம்.