இவ்வாரம் ரோன்95-இன் விலை லிட்டருக்கு 10 சென்னிலிருந்து 20 சென்வரை உயரலாம் என பாண்டான் எம்பி ரபிசி ரம்லி எச்சரிக்கிறார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை, நேற்றிரவு சீரியாமீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் இவற்றின் எதிர்வினையாக எண்ணெய் விலை உயரலாம் என்று அந்த பிகேஆர் எம்பி கூறினார்.
எண்ணெய் விலை உயர்வால் பாதிக்கப்படாதிருக்க மக்கள் விலை மாற்றங்களை அணுக்கமாகக் கண்காணித்து வர வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார். நிச்சயமற்ற எண்ணெய் விலைகளால் மக்கள் தொல்லைகளை எதிர்நோக்குவதற்கு அரசாங்கமே காரணம் என்றாரவர்.
“பிரதமர் நஜிப் ரசாக், அவரது அரசாங்கம் வாராந்திர விலை நிர்ணய முறையை அறிமுகப்படுத்தியதை அடுத்து எண்ணெய் உதவித் தொகையை மீண்டும் கொண்டுவர மறுப்பதால் எண்ணெய் விலைகள் ஏறுவதும் இறங்குவதுமாகவுள்ள நிச்சயமற்ற நிலையை மக்கள் எதிர்நோக்குகிறார்கள்”, என ரபிசி குறிப்பிட்டார்.
பயனீட்டாளர்களுக்கு உதவியாக வரவிருக்கும் எண்ணெய் விலைகள் குறித்த ஒரு மதிப்பீட்டை அவர் ஒவ்வொரு வாரமும் முன்கூட்டியே வெளியிட திட்டமிட்டுள்ளார்.