மகாதிர்: சட்டம் 355 முஸ்லிம்களைப் பிளவுபடுத்துகிறது, மற்றவர்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணலாம்

mahathir1965  ஷியாரியா  நீதிமன்ற( குற்றவியல்  நீதி)ச்   சட்டம்  அல்லது   சட்டம்  355-இல்  திருத்தம்    செய்யும்   தீர்மானத்தை  பாஸ்   தலைவர்    அப்துல்   ஹாடி   ஆவாங்     நாடாளுமன்றத்தில்     தாக்கல்     செய்வதற்கு  அனுமதித்ததன்வழி   அம்னோ   மலேசிய    முஸ்லிம்களிடையே  பிளவை   உண்டு  பண்ணி  விட்டது   என  முன்னாள்   பிரதமர்  மகாதிர்  முகம்மட்   கூறினார்.

“இதற்கும் (ஹாடியின்  தீர்மானம்)  இஸ்லாத்துக்கும்   சம்பந்தமில்லை.  இஸ்லாம்  முஸ்லிம்களைப்  பிளவுபடுத்தும்  காரியங்களைச்  செய்யச்  சொல்வதில்லை”.  நேற்றிரவு   ஷா  ஆலமில்   ஒரு  நிகழ்வில்  கலந்துகொண்ட  பின்னர்  மகாதிர்   செய்தியாளர்களிடம்   பேசினார்.

“பல்லின  நாட்டில்   எல்லா  சமயங்களைப்   பற்றியும்  நன்கு  உணர்ந்திருக்க   வேண்டும்.  இஸ்லாம்  மற்ற  சமயங்களை   மதிக்கிறது.  இஸ்லாத்தை   மற்றவர்கள்மீது  திணிக்கக்  கூடாது.  அவர்களுக்கு  இஸ்லாத்தின்மீது  பயம்  வந்து  விடும்”,  என்றார்.

ஒரு  கட்சி,  அரசியல்  ஆதாயம்  தேடும்  நோக்கில்  இவ்விவகாரத்தைப்  பயன்படுத்திக்    கொண்டிருக்கிறது   என  மகாதிர்   குறிப்பிட்டார்.