நேற்று முந்தினம் (ஏப்ரல் 6-ஆம் தேதி), நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருந்த மதமாற்று தொடர்பான திருமணச் சீர்திருத்த சட்ட மசோதா திடீரென ஒத்திவைக்கப்பட்டது வருத்தமளிக்கிறது என்கிறார் மலேசிய சோசலிஸ்ட் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் சரஸ்வதி முத்து.
தன்னிச்சையான மதமாற்றத்தைத் தடுப்பதற்கு வகை செய்யும் திருமணச் சீர்திருத்த சட்ட மசோதாவினைத் திட்டமிட்டப்படி தாக்கல் செய்யாமல் இறுதி நேரத்தில் அடுத்த கூட்டத்தொடருக்கு ஒத்திவைத்திருக்கும் மத்திய அரசின் முடிவு பெரும் ஏமாற்றம் அளிக்கும் ஒன்றாகும் என்று அவர் மேலும் கூறினார்.
தன்னிச்சையான மதமாற்றங்களால் அவதிக்குள்ளாகும் பிள்ளைகளின் எதிர்காலம், பராமரிக்கும் உரிமை மற்றும் பாதுகாப்பிற்கு இந்தச் சட்ட மசோதா வழிவகை செய்வதாக இருந்தது.
நாடாளுமன்ற பதிவேட்டில் தாக்கல் செய்வதாக இருந்த இந்த மசோதாவினை சில காரணங்களின் அடிப்படையில் மறுஆய்வு செய்யவிருப்பதாகக் கூறி ஒத்திவைக்க அரசு முடிவெடுத்திருப்பதாகத் துணைப்பிரதமர் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல.
இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே கடந்த 22 ஏப்ரல் 2009-ல் அமைச்சரவை எடுத்த முடிவுதான் இந்த மசோதாவில் அடிப்படை சாராம்சமாக உள்ளது.
ஆக, ஏன் இன்னும் ஆய்வு எனும் பேரில் கால தாமதம்? இது சந்தேகத்தையே எழுப்புகிறது. அரசின் இந்தத் திடீர் முடிவால், இவ்விவகாரம் தொடர்ந்து இழுபறி நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதோடு பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில், மக்களிடையே விரிசல்களும் குழப்பங்களும் ஏற்படவும் வழிவகுக்கும் என்பதை அரசு உணரவேண்டும் என சாடுகிறார் சரஸ்வதி.
கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தப் புதிய சட்டச் சீர்திருத்த மசோதா, கணவர் இஸ்லாத்திற்கு மதம் மாறிவிடும் போது விவாகரத்து மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்கும் உரிமை ஆகியவைத் தொடர்பான சிக்கல்களுக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தம்பதியரில் ஒருவர் இஸ்லாத்திற்கு மாறிவிடும் நிலையில், அவர்கள் சிவில் திருமணத்தின்போது எந்த மதத்தில் இருந்தார்களோ, அதே மதத்தில் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவர் எனவும், 18 வயதை அடைந்த பின் எந்த மதத்தை அவர்கள் பின்பற்ற விரும்புகிறார்கள் என முடிவெடுக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு என இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பெற்றோர்கள் இருவரின் சம்மதத்துடன், குழந்தைகளின் இணக்கத்தின் பேரில் நிகழும் மதமாற்றத்திற்கு மேற்கண்ட விதி பொருந்தாது.
நமது நாட்டில் இம்மாதிரியான எத்தனையோ வழக்குகளினால், பல தாய்மார்கள், பிள்ளைகள் தொடர்ந்து பாதிப்புள்ளாகி வருகின்றனர். இதில், இந்திரா காந்தி கடந்த 8 ஆண்டுகளாக தனது குழந்தைகளைப் பிரிந்து; தாய்ப்பாசத்தினைப் பிள்ளைகளுக்கு ஊட்டத் தவிர்க்கப்பட்டு வருவது பெரும் வருத்தத்திற்குரியது மட்டுமல்ல, இது ஒரு மனித உரிமை மீறலும் கூட என்பதனை மலேசிய சோசலீஸ்ட் கட்சி பதிவுசெய்ய விரும்புகிறது என்றார் அவர்.
அரசின் இந்தக் காலதாமதத்தினால், தாய்மார்களின் உரிமை, குழந்தைகளின் எதிர்காலம் மட்டும் பாதிக்கப்படவில்லை, மாறாக, இஸ்லாம் அல்லாதவர்களின் அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அவர்களின் தார்மீக உரிமையும், நாட்டின் மதசார்பற்ற அரசியல் கொள்கையும், மக்களின் ஒற்றுமையும் இதில் அடங்கியுள்ளதால், ஒட்டுமொத்த இஸ்லாமியர் அல்லாதவர்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
எனவே, வாக்குறுதி அளித்ததுபோல் இந்தத் திருமணச் சீர்த்திருத்த சட்ட மசோதாவை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், கட்டாயம் தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டும் என்று சரஸ்வதி கேட்டுக்கொண்டார்.
அது ஒரு ஏமாற்று வேலை என்பது தான் சரி! நாடாளுமன்றத்தை யார் கட்டுப்படுத்துகிறார்? சும்மா, ஒரு அரசாங்க நிறுவனமான ஜாக்கிம் கட்டுப்படுத்துகிறது! ஜாக்கிமை மீறி நாடாளுமன்றம் ஒன்றும் செய்ய இயலாது! ஒரு கிருஸ்துவ மத போதகரான ரேமன் கோ என்பவர் கடத்தப்பட்டாரே, காவல்துறையால் கண்டு பிடிக்க முடியுமா
? முடியாது! ஜாக்கிமைத் தவிர!
மதமாற்று சட்ட மசோதா ஒத்திவைப்பு ஒரு நாடகம்தான்.தீவிரவாதி ரித்வான் அப்துல்லா என்ன ஆனான் காவல் துறை கடமையில் இருந்து ஒதுங்கி கொண்டார்களா…?
காவல்துறை ரித்வானைக் கண்டுபிடிக்க முடியாது! இஸ்லாம் சம்பந்தபட்ட விஷயங்களில் ஜாக்கிம் மட்டுமே பொறுப்பு!
நான் அன்றே சொன்னேன்– இதெல்லாம் கண்கட்டு வித்தை. நிழல் விளையாட்டு. ஆட்சியில் இருக்க அம்னோ நாதாரிகள் PAS போன்ற நாதாரிகளின் ஆதரவுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வான் கள் –பகுத்தறிவு,பெருந்தன்மை,கொள்கை அற்ற ஈனங்கள்.
வணக்கம். ஷரியா சட்டத்திற்கு காட்டும் அக்கறையை, இந்த சட்டத்திற்கு அரசாங்கம் காட்டவில்லை. இதிலிருந்தே தெரிகிறது இந்த அரசாங்கத்தின் உறுதிப்பாடு.