குலா: இந்தியர்களுக்கான பெருந்திட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்

 

kulaunilateralconversionஇந்தியர்களுக்கான புதியதொரு பெருந்திட்டம் ஒன்றை பிரதமர் நஜிப் ரசாக் இந்த மாத இறுதிக்குள்  வெளியிடவிருக்கிறார் என்று தெரிகிறது.

ஆக்கபூர்மான இந்தத் திட்டத்திற்கு  தாம் வரவேற்பு நல்கும் அதே வேளையில் இது போன்ற பல திட்டங்கள் அன்றைய  பத்மநாபன்  காலத்திலிருந்து இன்றைய சுப்ரமணியம் காலம் வரை  அரங்கேறி வந்துள்ளதை இந்தியச் சமூகம் பார்த்துக்கொண்டுதான் வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால்,   உருப்படியாக ஒன்றுமே நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இந்தப் பெருந்திட்டமும் அதே கதிக்கு ஆளாகக் கூடாது என்பதுதான் தமது வேண்டுகோள் என்று டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறினார்.

 

அதனையொட்டி சில பரிந்துரைகளை நாடாளுமன்ற  உறுப்பினர் என்ற முறையிலும்,  இந்தியச் சமூகத்தின் அவலங்களை அடிக்கடி அரசாங்கத்திற்கு நினைவூட்டும் பொறுப்புமிக்க  ஓர்  எதிர்க்கட்சி  உறுப்பினர் என்ற வகையிலும் கூற விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

 

“இந்தப் பெருந்திட்டம், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளான ஆளும் கட்சி  மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இந்தத் திட்டத்தை  முறையாகவும், முழுமையாகவும், வெளிப்படையாகவும்  விவாதித்து அதற்கு ஒரு முழு வடிவம் கொடுக்க ஏற்ற மற்றும் தகுதியான இடம் நாடாளுமன்றமே என்று சுட்டிக்காட்டிய குலசேகரன், இந்தியச் சமூகம் எதிர்கொண்டுள்ள கல்வி, பொருளாதார மற்றும்  சமயப் பிரச்சனைகளை அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் நன்கு  அறிந்து வைத்ததுள்ளதால் அவர்களின் கருத்துகளும் இந்தப் பெருந்திட்டத்திற்கு வடிவம் கொடுப்பதில் பேருதவியாக   இருந்திருக்கும் என்றார்.

 

நாடாளுமன்றத்தில் இப்பெருந்திட்டம்  சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய குலசேகரன், அவ்வாறு செய்தால்  அதற்கு சட்ட வலிமை இருக்கும். பிற்காலத்தில்  சர்ச்சைக்கு இடம் அளிக்காமல்  அதன் நோக்கங்கள்  நிறைவேற தடையொன்றும் இருக்காது என்றார்.

 

“மாரா போன்ற  அமைப்பு இந்தியர்களுக்கும் வேண்டும் என்று நான் பல முறை  கூறியுள்ளேன். இந்தத் திட்டமாகிலும், மாரா எப்படி  மலாய்க்காரர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளதோ அதே போன்று, இந்தியர்களுக்கு இந்த நாட்டில் ஒரு  நிலையான மற்றும்   வளமான  எதிக்காலத்தை அமைக்க உதவும் என்று நம்புகிறேன்”, என்றாரவர்.

 

தமிழில் பாண்டித்தியம் பெற்றவர் தலைமை இயக்குனராக இருக்க வேண்டும்

 

இந்தத் திட்டத்தை அமலக்கம் செய்ய புதிய துறை ஒன்று அமையவிருப்பதாகவும் அதற்கு  தலைமை ஏற்க இயக்குனர் ஒருவர்  நியமிக்கப்படவிருப்பதாகவும் கேள்வியுறுகிறோம். அந்த தலைமை இயக்குனர்  பிரதமரின் கீழ் செயல்படுவாராம். அவர்  ஓர் இந்தியராக இருப்பார் என்று  நம்புவதாகவும் குலா கூறினார்.

 

அப்பொறுப்பை ம.இ.கா போன்ற  இந்திய அரசியல் கட்சிகளிடமிருந்து வந்த ஒருவரிடம் கொடுத்து இந்தியர்கள் ஏமாற்றம் அடையும் வகையில்  பிரதமர் செயல்பட மாட்டார் என்று  நம்புகிறேன். ம.இ. கா வின் இந்திய பொருளாதார வீயூகம் கடந்த காலங்களில் எவ்வித பயன்களை இந்தியச் சமூகத்தினருக்கு  பெற்று தந்துள்ளது என்பதை அனைவரும் கண்கூடாகக் கண்டுள்ளனர்.

 

“ஆகவே நிரந்தமாக இருக்கப் போகும் இந்தத் துறைக்கு அதற்கு  ஏற்றவராக, கல்வி, அனுபவம் ,சமுதாயப் பற்று மற்றும் அரசியல் சாயம் இல்லாத  ஓர் அப்பழுக்கற்றவரை பிரதமர் தேர்வு செய்யவேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறேன்.

 

“அதோடு தமிழில்  பாண்டித்தியம் பெற்றவரும், அடிமட்ட ஏழை இந்திய மக்களின் பிரச்சனைகளை அறிந்துணர்ந்த ஒருவரே அப்பதவியில் அமர வேண்டும். அப்படிப்பட்டவர் உயர் அரசாங்கப் பதவி வகிப்பவராக  இருப்பாரேயானால், அது மேலும் சிறப்பாக இருக்கும். உயர் அரசு பதவி வகிக்கும் ஒருவரால்தான்   அரசு இயந்திரங்களின் கட்டமைப்புகளையும் அவை செயல்படும் முறைகளையும் அறிந்திருக்க முடியும் . அந்த அனுபவத்தைக் கொண்டு  பல்வேறு  அமைச்சுகளுடன் தொடர்பு கொண்டு இந்தப் பெருந்திட்டத்தை இந்தியச் சமூகம் பயனடைய நிறைவேற்ற முடியும்”, என்று குலா நம்பிக்கை தெரிவித்தார்.