இன்று காலை, சுங்கை சிப்புட் ஹேப்பி கார்டனில் நடைபெறவிருந்த புட்சால் விளையாட்டுப் போட்டி, கடைசி நேரத்தில் சுங்கை சிப்புட் இளைஞர் விளையாட்டுத் துறை இலாகாவால் அனுமதி மறுக்கப்பட்டதால், இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், 300-க்கும் மேற்பட்ட சுங்கை சிப்புட், தைப்பிங் , ஈப்போ வட்டாரங்களைச் சார்ந்த இளைஞர்கள் சோர்வடைந்தனர்.
சுங்கை சிப்புட் அமானா கட்சியின் ஏற்பாட்டிலான இந்த ‘பக்காத்தான் ஹராப்பான் கிண்ணம்’ போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செவ்வனே செய்யப்பட்டிருந்ததுடன், வாடகையும் முன்கூட்டியே செலுத்தப்பட்டுவிட்டது. ஆரம்பத்தில் எதிர்க்கட்சி சின்னங்கள் எதுவும் விளம்பரப் பதாகைகளில் இருக்கக்கூடாது என்று கட்டளையிட்டது இலாகா.
அதற்கு இணங்க, கட்சி சின்னங்கள் அனைத்தையும் நீக்கியதாக ஏற்பாட்டுக் குழுவினர் கூறினர். ஆனால் , இறுதி நேரத்தில் எந்தவொரு முன்னறிவிப்பின்றி, முறையான காரணமின்றி அனுமதி மறுக்கப்பட்டது அவர்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது எனவும் வருத்தம் தெரிவித்தனர்.
இன்று நடைபெறவிருந்த புட்சால் போட்டியில் 28 குழுக்கள் விளையாட பதிந்திருந்தனர். காலையிலேயே ஆர்வத்துடன் வந்த அவர்களுக்கு, இளைஞர், விளையாட்டு இலாகாவின் இச்செயல் ஏமாற்றத்தையே தந்தது.
புட்சாலுக்குத் தலைமையேற்ற, ஜாலோங் சட்டமன்ற உறுப்பினர், லோ சி யீ மற்றும் இன்னும் பிற பக்காத்தான் தலைவர்களும் இளைஞர், விளையாட்டுத் துறை இலாகாவின் இந்த முடிவைக் கண்டித்தனர். இதனால் ஏற்பட்ட அனைத்து செலவுகளையும் இலாகா ஈடுசெய்ய வேண்டும் எனவும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்யும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அரசாங்க மண்டபங்கள், திடல்கள் , மைதானங்கள் அனுமதி மறுக்கப்படுவது காலங்காலமாக நம் நாட்டில் நடந்துவருகிறது. மக்களின் வரி பணத்தில் மேம்படுத்தப்படும் இவ்விடங்களைப் பயன்படுத்த அனைத்து மலேசியர்களுக்கும் உரிமையுண்டு.
ஆனால், எப்போதுமே எதோ ஒரு காரணத்தைக் கூறி, எதிர்க்கட்சியினருக்கு அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கச் செயல். அப்படியே ஒருவேளை அனுமதி கொடுத்தாலும், கடைசி நேரத்தில் சற்றும் பொறுப்பில்லாமல், சாக்குபோக்கு சொல்லி அனுமதி மறுக்கப்படுகிறது.
இதனால், ஏற்பாட்டாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் பாதிப்படைகின்றனர் என சுங்கை சிப்புட்டைச் சார்ந்த நாகேன் கூறினார். ஆக, இந்த விசயத்தில் நிர்வாகத்தில் இருக்கும் ஆளும் அரசாங்கம் நிபுணத்துவத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நாட்டில் என்ன ஆட்சி நடக்கிறது? தொட்டதிற்கு எல்லாம் எதிர் கட்சிகளை வழி வாங்குவதே இந்த ஆளும் நாதாரிகளுக்கு வாடிக்கையாக போய் விட்டது.
*பழி
போட்டிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முறைப்படி செய்திருந்து முறையான காரணமின்றி மறுக்கப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுங்கள் !!