பொகா சட்டத்தில் கணவர் தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனைவி வழக்கு

caseஒரு   விற்பனையாளரைக்   குற்றத்   தடுப்புச்  சட்டம்(பொகா)  1959-இன்கீழ்   21-நாள்   தடுத்து  வைத்ததை   எதிர்த்து   கோலாலும்பூர்  உயர்   நீதிமன்றத்தில்   வழக்கு   தொடுக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.   விஷ்ணு  மூர்த்தி   வீனஸ்  எப்எக்ஸ்   நிறுவனத்தின் பணியாளர்.   அந்நிறுவனத்தின்  அன்னிய  செலாவணித்  திட்டத்தில்    23,000  பேர்  ரிம80 மில்லியனை  முதலீடு  செய்து    ஏமாந்து  போனதாகக்  கூறப்படும்   விவகாரம்  தொடர்பில்   அவர்   மார்ச்  29-இல்  கைது    செய்யப்பட்டார்.

விஷ்ணு  மூர்த்தி    ஓராண்டுக்கும்   மேலாகத்தான்  அந்நிறுவனத்தில்     வேலை   செய்து   வருகிறார்   என்றும்   அவர்   “வெறும்   விற்பனையாளர்   மட்டுமே”,   முடிவு    செய்யும்    பொறுப்பில்   இல்லை     என்றும்    அவரின்   மனைவி   ஏ.மகேஸ்வரி    நீதிமன்றத்தில்   பதிவு  செய்த  மனுவில்     குறிப்பிட்டுள்ளார்.

“இதுபோன்ற  வணிகக்  குற்றத்தில்  பொகா-வைப்  பயன்படுத்துவது   அதிகாரத்தைத்   தவறாக  பயன்படுத்துவதாகும்”,  என்று   அவரின்  வழக்குரைஞர்  பி.உதயகுமார்   கூறினார்.

அவரது  21-நாள்  தடுப்புக்  காவல்  முடிவுக்கு   வருவதற்குமுன்  இவ்விவகாரத்தைக்  கவனிக்குமாறு   கேட்டுக்கொண்டு   அவசரச்  சான்றிதழ்  ஒன்றையும்  உதயகுமார்  பதிவு  செய்துள்ளார்.

வீனஸ் எப்எக்ஸ்  ஊழல்   தொடர்பில்   அறுவர்  கைது  செய்யப்பட்டிருப்பதாக  போலீசார்  கூறினர்.