வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கான காலத்தை நீட்டிக்கும் கால நீட்டிப்பு (இஓடி) கொடுக்கப்பட்ட வீடமைப்பாளர்களின் பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்று வினவியதற்கு நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் நோ ஒமார் அதைக் கூற மறுத்தார்.
அதை வெளியிடுவதற்கு ஒரு காலக்கெடு உண்டா என்றதற்கு “இல்லை” என்றார்.
“அந்த அளவுக்கு விவரங்கள் உங்களுக்கு எதற்கு?”, என மலேசியாகினியிடம் கேட்டார்.
“அவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஒவ்வொன்றாக என்னால் வாசிக்க முடியாது”, எனக் கையில் வைத்திருந்த ஒரு கட்டுக் காகிதங்களைத் தூக்கிக் காட்டினார்.
நோ, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் டிஏபி எம்பி அந்தோனி லோக் அது குறித்து கேட்டதற்கு அப்பட்டியலை அவரிடம் கொடுப்பதாகக் கூறியிருந்தார்.
ஆனால், லோக் இன்னும் தமக்குப் பட்டியல் கிடைக்கவில்லை என்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இன்று காலை பெட்டாலிங் ஜெயாவில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட நோவிடம் அது குறித்து வினவியதற்குக் கொடுக்கப்போவதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
செய்தியாளர்கள் மீண்டும் வினவியதற்கு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கொடுப்பதாகச் சொல்லிவிட்டதாகவும் அதனால் அதற்கென ஒரு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டியதில்லை என்றும் கூறினார்.
“நான் கொடுக்கவில்லை என்றால் அடுத்த நாடாளுமன்றக் கூட்டம்வரை காத்திருங்கள். பிறகு என்னைப் போட்டுத் தாக்கலாம்”, என்றார்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் 2014-இலிருந்து 304 இஓடி-கள் வீடமைப்பாளர்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.