நன்யாங் சியாங் பாவ்வின் ஹாடி-பண்டிகார் ‘குரங்கு’ கார்டூன்

Monkeyactபாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா ஆகிய இருவரையும் குரங்குகளாகக் காட்டும் கார்டூன் (சித்திரக்கலை) ஒன்றை வெளியிட்டதற்காக, பாஸ் கட்சியினர் எழுப்பிய ஆட்சேபத்தைத் தொடர்ந்து, சீன நாளிதழான நன்யாங் சியாங் பாவ் மன்னிப்பு கோரியுள்ளது.

“ஏப்ரல் 8 இல் எங்களுடைய நாளிதழ் சட்டம் 355 மீதான ஒரு நகைச்சுவையை வெளியிட்டது. அது பண்டிகாரையும் ஹாடியையும் அவமதிப்பதாக இருக்கிறது. அவர்கள் இருவரிடமும் நான்யாங் மனதார மன்னிப்புக் கோருகிறது.

“நன்யாங் வலைத்தளம் அந்த நகைச்சுவை சித்திரக்கலையை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது”, என்ற அறிக்கை அந்த வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்யாங் நாளிதழுக்கு எதிராக நாளை பல ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளப் போவதாக பாஸ் இளைஞர் பிரிவு விடுத்திருந்த மிரட்டல்களைத் தொடர்ந்து நன்யாங் மன்னிப்புக் கோரல் வெளியிடப்பட்டது.

“குரங்குச் சேட்டை” என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்தக் கார்டூனில் சொங்கோக் அணிந்திருந்த ஒரு குரங்குக்கு “அவைத் தலைவர்” (Speaker) என்றும் தலைப்பாகை அணிந்து அதன் இடது கையில் கட்டியக்கோலை பிடித்துக் கொண்டு “சட்டம் 355” என்ற மரத்தில் உட்கார்ந்திருந்த இன்னொரு குரங்குக்கு “ஹாடி அவாங்” என்றும் பெயரிடப்பட்டிருந்தன.

இந்தக் கார்டூன் மரத்தின்கீழ் ஒரு குரங்குக் கூட்டம் விவாதம் செய்து கொண்டிருப்பதையும் சித்தரிக்கிறது.

இந்தக் கார்டூன் அந்நாளிதழின் மென்னஞ்சல் பதிப்பிலிருந்து இன்று மாலை மணி 6.00 அளவில் அகற்றப்பட்டது.