சிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாம் அல்லாத பிற சமய வழிபாட்டுத்தலங்களின் நிர்மாணிப்பு மீதான வழிக்காட்டிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. அது போன்ற ஒரு வழிகாட்டியை மாநிலக் கொள்கையாக ஏற்றுக்கொள்ள அது மாநில ஆட்சிக்குழுவின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும். அதேபோல் கொள்கைகள் மாற்றமும் மாநில ஆட்சிக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
ஆனால், புது விவகாரமாகியுள்ள சமய வழிபாட்டுத்தல நிர்மாணிப்பு மீதான கொள்கை மாற்றம் என்பது இதுவரை எந்த ஆட்சிக் குழு கூட்டத்தின் அங்கீகாரத்தையும் பெறவில்லை என்பதைச் சிலாங்கூர் மாநில இஸ்லாம் அல்லாத பிறமத வழிப்பாடுத்தளங்களின் உபக்குழுத் தலைவரான தெங் சாங் கிம் குறிப்பிட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
சிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாம் அல்லாத பிறமத வழிபாட்டுத்தலங்களின் நிர்மாணிப்பு வழிகாட்டிக் கொள்கையில் எந்த மாற்றமும் கொண்டு வருவதற்கு முன்பு, முழுக்க இஸ்லாம் அல்லாத சமயப் பிரதிநிதிகளின் கூட்டங்களில் அது குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதலைப் பெற வேண்டும்.
அக்கூட்டத்தில் அரசாங்க இலாகாக்களின் பிரதிநிதிகள் உட்பட ஆலயங்களின் பிரதிநிதிகள், எல்லா சமயங்களின் அதாவது சீக்கிய, இந்து, பௌத்த, கிருஷ்துவ மற்றும் சீன சமயத் தலைவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளும் கலந்துக்கொள்ளும் மாதாந்திர கூட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும்.
அந்த முடிவே மாநில ஆட்சிக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, பிறகு, ஆட்சிக்குழுவின் அங்கீகாரத்துடனேயே அது விதியாக நிறைவேற்றப்பட வேண்டும். எந்த ஒரு விவகாரத்திலும் சமயத்தலைவர்கள் தரப்பும் அரசாங்க அதிகாரிகளின் தரப்பும் ஒத்துப்போகாத சூழ்நிலையில் மூன்று சமயங்களைப் பிரதிநிதிக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர்களான கணபதிராவ் மற்றும் எலிசபெத் ஓங் ஆகியோரின் ஆலோசனைப்படியே, இந்த உபக்குழு தலைவரும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான கிள்ளான் சுங்கை பினாங் சட்டமன்ற உறுப்பினர் தெங் சாங் கிம் இறுதி முடிவு செய்வார். இப்படிப் பல அடுக்கு பாதுகாப்பு முறை உண்டு.
சமய விவகாரங்களில் எந்தச் சமயத்தின் நலனும் பாதிக்கப்படக்கூடாது, எவரும் தவறாக, தன்னிச்சையாக முடிவு எடுத்துவிடக்கூடாது என்பதால் பல அடுக்கு ஆய்வு, அதிகார முறைகளுடன் தோற்றுவிக்கப்பட்டது சிலாங்கூர் மாநில இஸ்லாம் அல்லாத சமயத்தின் உபக்குழு என்றார் அக்குழுவின் முன்னாள் தலைவரும் அதன் அமைப்பாளருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
அடுத்த தேர்தல் நெருங்கி விட்டதால் இது போன்ற உணர்ச்சிகரமான பிரச்சனைகளுக்குச் சிலர் தூபம்இடுகின்றனர். கடந்த பொதுத்தேர்தலுக்கு முன் குடியிருப்பு வீட்டின் முன்பகுதியை அனுமதியின்றிப் புதுப்பித்து முன்பகுதியில் தாவாரம் இறக்கிய சட்டவிரோதச் செயல்களுக்குச் சாமிமேடை உடைக்கப்பட்டதாக நாடகம் நடத்தியதை அனைவரும் மறந்திருக்க மாட்டார்கள். அதனால் அடுத்து வரும் சில மாதங்களுக்கு, இது போன்ற விசயங்கள் தலையெடுக்கும். ஆகவே, மாநில அரசும் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும் என்றாரவர்.
எந்த ஓர் ஆலயமும் மதமும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளால் பாதிக்கப்படக்கூடாது என்பதில் சிலாங்கூர் மாநில அரசு மிகக் கவனமாக உள்ளது என்பதற்கு மேல் குறிப்பிட்ட பல அடுக்கு ஆய்வு, அதிகார முறைகளுடன் தோற்று விக்கப்பட்ட சிலாங்கூர் மாநில இஸ்லாமியர் அல்லாதோரின் பிறசமய உபக்குழு நாட்டிற்கே ஒரு முன்னுதாரணமாகும், ஆகையால் மக்கள் அதன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.