உள்ளூராட்சி மன்றம் – நியமனமா? தேர்தலா?

pakatan harapan2உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாநகராட்சி மன்றம் ஆகியவற்றின் உறுப்பிணர்களை தேர்தல் வழி தேர்வு செய்வதா அல்லது நியமனம் செய்வதா? எது சனநாயக முறை?, எது ஏற்புடையது?

1950 மற்றும் 1952 இல் உருவாக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையில், தேர்தல் முறையில்தான் உள்ளூராட்சி மன்றம் செயல்பட்டது. ஆனால், இந்தோனேசியாவுடன் 1963 இல் ஏற்பட்ட எல்லைப் போரின் காரணமாக 1965 ஆம் ஆண்டு இந்த தேர்தல் முறை அவசரகால சட்டத்தின் கீழ் காலவரம்பின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

அதன் பிறகு தேசிய முன்னணி அதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இன்று வரை அதை பல்வேறு  சட்டங்கள் வழி அமுலாக்கி வருகிறது.

2008 ஆம் ஆண்டு ஒரு புதிய திருப்பம் உண்டானது. மீண்டும் தேர்தல் முறை வேண்டும் என்பதுதான் அது. 2008-இல், ‘மக்கள் கூட்டணி’யாக இருந்தபோது, உள்ளூராட்சித் தேர்தலை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவருவோம் என்று அது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், மத்திய அரசாங்கம் தேசிய முன்னணியின் கட்டுபாட்டில் இருப்பதால் மாநில அரசாங்கம் அதை அமுலாக்கம் செய்ய இயலாமல் இருப்பதாகச் சொல்கின்றனர்.

இது சார்பாக அண்மையில் எழுந்துள்ள முரண்பாடான விவாதங்களில் சில:

arulதேர்தல் முறைதான் சனநாயகமானது என்று விடாப்பிடியாக இருப்பது மலேசிய சோசியலிசக்   கட்சியாகும் (பி.எஸ்.எம்.). இதன்  மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ்.அருள்செல்வன், அமானா கட்சியின் தேசியத் தலைவர் முகமட் சாபு, உள்ளூராட்சி மன்றங்களுக்கானத் தேர்தலை ஆதரித்துள்ளதாவும் கூறுகிறார்.

மலேசிய பிரிபூமி பெர்சத்து கட்சியின் (பெர்சத்து) தலைவர் மகாதீர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆபத்தான சூழல்களுக்கு வழிவகுக்கலாம் எனக்கூறி தனது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல், நகர்ப்புறங்களில் சீனர்களின் ஆதிக்கத்தையும் கிராமப்புறங்களில் மலாய்க்காரர்களின் ஆதிக்கத்தையும் உருவாக்கும் என அந்த முன்னாள் பிரதமர் வாதிடுகிறார்.

மேலும், குறிப்பிட்ட ஓர் இனத்தின் ஆதிக்கம் ஓர் இடத்தில் அமைந்தால், அது நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டலாக அமையும் எனவும் அவர் எச்சரிக்கின்றார்.

இதனால்,  முன்னாள் மக்கள் கூட்டணி கட்சிகள் தங்களின்  முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள கூடாது என்று வாதிடுகிறார் அருட்செல்வன்.

மகாதீரின் இந்த ஆட்சேபனை குறித்து, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்களின் அடுத்தக் கூட்டத்தில் பேசப்படலாம் என்று முகமட் சாபு கூறியுள்ளார்.

அனைத்து மட்டங்களிலும் உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் நடத்தப்படுவதை பி.எஸ்.எம். ஆதரிப்பதாக அருட்செல்வன் கூறுகிறார். மேலும்,   “உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தடைசெய்யப்படுவதற்கு முன், பல இடதுசாரிகள் அத்தேர்தல்களில் அதிக இடங்களை வென்றது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக, அந்தக் காலக்கட்டத்தில் இத்தேர்தல் தடை செய்யப்பட்டதற்கான உண்மையான காரணமே இதுதான் (இடதுசாரிகளின் வெற்றி)”, என்கிறாரவர்.