ஐஜிபி: காணாமல்போன சமூக ஆர்வலர் தாய்லாந்து செல்லக் காணப்பட்டார்

igpகாணாமல்போனதாக    அறிவிக்கப்பட்டுள்ள   பெட்டாலிங்   ஜெயா   கவுன்சிலர்   பீட்டர்   சோங்,    ஒரு  பேருந்தில்   தாய்லாந்து   செல்லக்  காணப்பட்டிருக்கிறார்    என  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்   காலிட்   அபு  பக்கார்   கூறினார்.

“ஏப்ரல்  7-இல்    மாலை   மணி   6.30க்கு    சோங்   தாய்லாந்து    செல்லக்   காணப்பட்டார்   என்பதை   உறுதிப்படுத்த   விரும்புகிறேன்.

“அவர்  ஒரு  பேருந்தில்   புக்கிட்   காயு   ஈத்தாம்   எல்லையைத்   தாண்டிச்   செல்வதைக்   காண்பிக்கும்    நிழற்படம்    இருக்கிறது”, என  இன்று    கோலாலும்பூரில்   செய்தியாளர்   கூட்டமொன்றில்   காலிட்    குறிப்பிட்டார்.

ஆனால்,  சோங் மலேசியாவுக்குத்   திரும்பி   வந்ததற்கு   ஆதாரம்   ஏதுமில்லை.  தாய்லாந்து    போலீசாரின்    உதவியுடன்   சோங்கைத்   தேடி   வருவதாக   காலிட்  தெரிவித்தார்.

சோங்,  என்கிருந்தாலும்   அவரின்   குடும்பத்தாரைத்    தொடர்புகொண்டு   அவர்   நலமே   இருப்பதைத்     தெரியப்படுத்துவார்   என்று   பெரிதும்   எதிர்பார்ப்பதாகவும்   அவர்    சொன்னார்.

சோங்   கடந்த   சனிக்கிழமையிலிருந்து   காணப்படவில்லை     என்று   புகார்  செய்யப்பட்டுள்ளது.   கடைசியாக    அவர்     ஏப்ரல்  5-இல்    கோலாலும்பூரில்   உள்ள   அவரது   கொண்டோமினியத்திலிருந்து   வெளியேறிச்     செல்லக்   காணப்பட்டார்.

இரு  மாதங்களுக்குமுன்     பாதிரியார்   ரேய்மண்ட்    கோ     கடத்தப்பட்டதை   அடுத்து    காணமல்போனதாக     அறிவிக்கப்பட்டுள்ள   ஐந்தாவது   நபர்   சோங்.