ஷாபுடின் எம்பி ஆகக்கூடாது, பெண்கள் முழக்கம்

 

Drophimascandidateகடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறை குறித்து தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாபுடின் யாஹயா கூறியிருந்த கருத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து நாடுதழுவிய அளவில் இருபதுக்கு மேற்பட்ட பெண்கள் இயக்கங்கள் அவரை அடுத்தப் பொதுத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று பிரதமர் நஜிப்பை கேட்டுக்கொண்டனர்.

பாலியல் வன்முறை குற்றம் புரிந்தவர் அவரால் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்துகொள்ளுதல் இந்தப் சமூகப் பிரச்சனைக்கு ஒரு தீர்வாகும் என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

“அவ்வாறான ஒருவரை நாடாளுமன்றத்திலிருந்து அகற்றுவதற்காக பல அமைப்புகளிடமிருந்து கையொப்பங்களை இன்று பெற்றுள்ளோம். அவற்றை பிரதமருக்கு அடுத்த வாரம் அனுப்பி வைப்போம்”, என்று மலேசிய சீனர்கள் மன்றத்தின் பெண்கள் பிரிவுத் தலைவர் எங் கியோக் சீ நேற்று பின்னேரத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஷாபுடினின் கருத்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மதிப்புக்கு ஒவ்வாததாகும் என்று அவர் மேலும் கூறினார்.

ஷாபுடினை அடுத்த பொதுத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தக்கூடது என்று அவாம் என்ற அமைப்பின் முன்னாள் தலைவர் ஹோ யோக் லின் பிரதமர் நஜிப்பை கேட்டுக்கொண்டார்.

யோக் லினின் கருத்தை ஆதரித்த மலேசிய சோசியலிசக் கட்சியின் பெண்கள் பிரிவுத் தலைவர் எஸ். விநோதா, பெண்களின் உரிமைகளுக்கு எத்தகைய மதிப்பு அளிக்கப்படுகிறது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகள் பிரதிபலிக்கின்றன என்றார்.

மேலும், 2000-2015 ஆண்டுகளுக்கிடையில் 37,000 க்கும் கூடுதலான பாலியியல் வன்முறைக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அது சராசரி ஒரு நாளைகு எட்டு வன்முறைகளாகும் என்றாரவர்.

இந்த பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதையும் விநோதா சுட்டிக் காட்டினார்.

60 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், பெரும்பாலும் பெண்கள், ஷாபுடினுக்கு எதிராக ஆட்சேபம் தெரிவிப்பதற்காக இந்த செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.