கடந்த ஆண்டு அம்பாங்கில் பெர்சே பேரணி விளக்கக் கூட்டத்தில் கலகம் செய்ததாக சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் மீதும் அவரின் ஆதரவாளர்கள் ஒன்பது பேர்மீதும் அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
அவர்கள்மீது குற்றவியல் சட்டம் பிரிவு 147-இன்கீழ் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடின பட்சம் ஈராண்டுச் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
நவம்பர் 13-இல், அம்பாங் பாயிண்ட் விற்பனை மையத்தில் அவர்கள் அக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.
அவர்களை ரிம3,000 பிணையில் விடுவித்த நீதிபதி லுப்தி முகம்மட், அவர்கள் மீதான வழக்கு மே 3-இல் விசாரணைக்கு வரும் என்றார்.
சம்பவம் நடந்த நாளில், அம்பாங் பாயிண்டில் அம்பாங் எம்பி ஸுரைடா கமருடினும் பிகேஆர் கட்சியினரும் பெர்சே பேரணி குறித்து ஒரு கூட்டத்தில் விளக்கமளித்துக் கொண்டிருந்தபோது ஜமாலும் அவரின் ஆதாரவாளர்களும் கூட்டத்தில் புகுந்து குழப்பம் விளைவித்தார்கள். அப்போது கைகலப்பு ஏற்பட்டதில் ஜமாலின் மூக்கு உடைபட்டு இரத்தம் கொட்டியது.