1எம்டிபி-இன் முன்னாள் தூனை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சென். பெர்ஹாட்டிடமிருந்து நிதி பெற்றவர் முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நஷாருடின் மாட் இசா என பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி இன்று அறிவித்தார்.
கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் பெயரை அறிவித்த பாண்டான் எம்பி, அதன் தொடர்பில் சத்திய பிரமாணம் ஒன்றையும் எடுத்து வைத்துள்ளார்.
நஷாருடின் பாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர். அவர் பாஸ் கட்சிக்கும் அம்னோவுக்குமிடையில் ஒற்றுமை அரசாங்கம் அமைவதற்கு மிகவும் பாடுபட்டவர் என்பது ஊரறிந்த உண்மை.
இப்போது அவர், உலக மிதவாத இயக்க(Global Movement of Moderates -ஜிஎம்எம்)த் தலைவராக உள்ளார். இந்த இயக்கம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர்களின் சிந்தனையில் உருவானது.
ஏப்ரல் 6-இல் , ரபிசி, பாஸ் கட்சித் தலைமைக்கு நெருக்கமான ஒருவருக்கு நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பணம் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
அப்போது அவர் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனாலும் பலருக்கும் ரபிசி நஷாருடினைத்தான் குறிப்பிடுகிறார் என்று எப்படியோ தெரிந்து விட்டது. வலைப்பதிவர் ராஜா பெட்ரா கம்ருடினும் நஷாருடின் பெயரைத்தான் குறிபிட்டார்.
மலேசியாகினி நஷாருடினைத் தொடர்புகொள்ள பல முறை முயன்றது. அவரிடமிருந்து பதிலே இல்லை.