வீடுகள் கட்டித்தர கொடுத்த வாக்குறுதியை பெர்ஜெயா நிறைவேற்ற வேண்டும், தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

 

Estateworkersdemandபெர்ஜெயா கார்ப்பரேசன் அலுவலகம் அமைந்திருக்கும் கோலாலம்பூர் பெர்ஜெயா டைம்ஸ் ஸ்கொயருக்கு வெளியில் 200க்கு மேற்பட்ட முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் சிலாங்கூர் பத்தாங் பெர்ஜுந்தைச் சேர்ந்த ஐந்து தோட்டங்களில் வாழ்ந்தவர்களின் நான்கு மற்றும் ஐந்தாவது தலைமுறையினர் ஆவர். அத்தோட்டங்களை பெர்ஜெயா வாங்கி 1998 லிருந்து 2015 ஆண்டு வரையில் நிருவாகித்து வந்தது.

பெர்ஜெயா வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கு 1999 ஆம் வாக்குறுதி அளித்ததாக அவர்கள் கூறிக்கொண்டனர்.

இந்த விவகாரம் குறித்து பெர்ஜெயா பிரதிநிதிகளைச் இன்று சந்திக்க முடிந்ததாக தோட்டப் பாட்டாளிகளைப் பிரதிநிதித்திருந்த பிஎஸ்எம் மத்தியக் குழு உறுப்பினர் எஸ். அருட்செல்வன் கூறினார்.

பின்னர், மலேசியாகினியிடம் பேசிய அருட்செல்வன், தொழிலாளர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து எதிர்வினையாற்ற நிருவாகம் ஒப்புக்கொண்டது; ஆனால் அதற்கான கால வரம்பு அளிக்கப்படவில்லை என்றார்.

“நாங்கள் அவர்களுக்கு ஒரு மாத அவகாசம் கொடுப்போம். அடுத்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்வார்களா என்று பார்ப்போம்”, என்று அருட்செல்வன் மேலும் கூறினார்.

பெர்ஜெயாவின் கருத்தை அறிய மலேசியாகினி விடுத்த வேண்டுகோளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.