18 ஆண்டுகள்: வீடுகளுக்காக பந்தாடப்படும் தோட்ட மக்கள்!

Psm 1 “பத்தாங் பெர்சுந்தையைச்  சேர்ந்த 5 தோட்டங்களின் தொழிலாளர்கள் கடந்த 18 ஆண்டுகளாக, பெர்ஜயா கோப்பரேசன் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் எனக் காத்திருந்தனர்,” என்று மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் கூறினார்.

18 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாததால், நம்பிக்கை இழந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள், தங்களின் வீட்டுரிமையை நிலைநாட்ட, பெர்ஜாயா கோப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்திற்கு எதிராக சிட்டி சென்டரில் இன்று காலை மறியலில் இறங்கினர்.

நேற்று (13.4.2017) காலையில் , பெர்ஜாயா டைம்ஸ் ஸ்குவேர் முன்புறம் கூடிய மேரி, நைகல் கார்டன், சுங்கை திங்கி, மின்ஞாக் மற்றும் புக்கிட் தாகார் ஆகிய 5 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஏற்கனவே வாக்களித்தது போல், முழு மானியத்தோடு, 245 மலிவுவிலை வீடுகளை பெர்ஜயா சிட்டி நிறுவனம் (பெர்ஜயா) கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடினர்.

psm2இந்த முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வாதிடும் எஸ். அருட்செல்வன், பெர்ஜயா நிறுவனம் தனது 18 ஆண்டுகால வாக்குறுதியை நிறைவேற்றாமல் போய்விடுமோ என்ற பயத்தின் காரணமாகவே தொழிலாளர்கள் இன்று, இங்கு ஒன்று கூடியதாகக் கூறினார்.

18 ஆண்டுகளுக்கு முன், பிரான்ஸின் சொக்ஃபின் குழும நிறுவனத்திடமிருந்து, இந்தத் தோட்டங்களைப் பெற்றுக் கொண்டதிலிருந்து, பெர்ஜாயா பல வாக்குறுதிகளைத் தோட்ட தொழிலாளர்களுக்குக் கொடுத்துள்ளது.

“ 1998 முதல், அவர்கள் பல வாக்குறுதிகளை அளித்துள்ளனர். அதில் ஒன்றுதான் தொழிலாளர்களுக்கான வீடுகள். இது குறித்து, அப்போதைய சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கே.சிவலிங்கம் பெர்ஜாயா நிறுவனத்துடன் கலந்துப் பேசியுள்ளார்,” என அருட்செல்வன் மேலும் கூறினார்.

psm3பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பெர்ஜயா குழும அதிகாரிகள், பெர்ஜயா டைம்ஸ் ஸ்கூவேர் அரங்கத்திற்குள் அழைத்து, அவர்களுடன் கலந்துரையாடினர். இருப்பினும், ஊடகவியலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.

கூட்டத்திற்குப் பிறகு, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அருட்செல்வன், பெர்ஜாயா நிறுவன இயக்குநர் ஷுராய்னா மூசா, தொழிலாளர்களின் இக்கோரிக்கையை பரிசீலிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.

இருப்பினும், வீடுகள் எப்போது கட்டப்படும் என்பது குறித்த விவரங்களை அவர்கள் தரவில்லை என்று தெரிவித்தார்.

“பெர்ஜாயா நிறுவனம் எங்களை உள்ளே அழைத்து கலந்துரையாடியதை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால், தொடர்ந்து அவர்கள் எங்களைப் புறக்கணித்தால்; மீண்டும் வீதியில் இறங்கி போராட நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றார் அவர்.

தொடர்ந்து நிறுவனத்தின் வாக்குறுதிகள் குறித்து பேசிய அருட்செல்வன், மாற்று வீடுகள் பிரச்சனைத் தீரும்வரை, தற்போதைய மற்றும் முன்னாள் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய மாட்டோம் எனவும் பெர்ஜாயா நிறுவனம் கூறியதாகத் தெரிவித்தார்.

psm5மேலும் , 2008-ல் , சிலாங்கூர் மாநிலத்தின் அப்போதைய மந்திரி பெசார் கீர் தோயோ, பெர்ஜாயா நிறுவனத்திற்கு வழங்கிய ஒரு கடிதத்தில், சுங்கை திங்கி வட்டாரத்தில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4,000 சதுர அடியில் நிலம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்ததாக அவர் கூறினார்.

இருப்பினும், அக்டோபர் 2015-ல், பெர்ஜாயா நிறுவனம் தோட்டங்களைப் ப்ரோஸ்பர் குழுமத்திற்கு விற்றுவிட்டதால்; மார்ச் 2016-ல், 57 தொழிலாளர்களைத் தோட்டத்திலிருந்து வெளியேறுமாறு நோட்டிஸ் வெளியானது.

“அந்த 57 தொழிலாளர்களும் தோட்டத்தில் வேலை செய்யவில்லை என்ற காரணத்தை முன்வைத்து, ப்ரொஸ்பர் குழுமம் அவர்களுக்கு நோட்டிஸ் கொடுத்தது,” என்று எஸ்.அருட்செல்வன் தெரிவித்தார்.