எஸ்ஆர்சியிடமிருந்து நிதி பெற்றதாக கூறுவதை நஷாருடின் மறுக்கிறார்

Nasharuddindeniesபாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நஷாருடின் மாட் இசா எஸ்ஆர்சி இண்டர்நேசனல் செண்ட். பெர்ஹாட்டிடமிருந்து நிதி பெற்றதாக கூறப்படுவதை மறுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்துடன் ஒத்துழைக்கப் போவதாகவும், மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகூட எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் நஷாருடின் அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஏப்ரல் 13 இல், ரஃபிஸி ரமலி வெளியிட்ட அறிக்கை ஓர் அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும் அதை வலுவாக மறுப்பதாகவும் கூறிய நஷாருடின், அவருக்கு எதிராக அடுத்த நடவடிக்கையாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட ஆலோசனை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

பாண்டான் எம்பியும் பிகேஆர் உதவித் தலைவருமான ரஃபிஸி ரமலி நேற்று வெளியிட்ட அவரது சத்தியப் பிரமாண அறிக்கையில் நஷாருடின் நிதியை ஒரு வழக்குரைஞர் மூலமாகப் பெற்றதாக கூறியிருந்தார்.

அந்த நிதி பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து வெளியானதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ரஃபிஸின் தகவல்படி, 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி ஆகியவை மீதான விசாரணைகள் பற்றி நன்கு அறிந்துள்ள ஒரு முன்னாள் எம்எசிசி அதிகாரியிடமிருந்து அவர் இத்தகவலைப் பெற்றுள்ளார்..