கோலாலும்பூர், கிராமாட்டில் பொது வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிடும் மேம்பாட்டாளர்கள் அவை கட்டுப்படியான விலையில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தித்திவங்சா எம்பி ஜொகாரி அப்துல் கனி கூறினார்.
அப்பகுதியில் ஆடம்பரத் திட்டங்கள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது குறித்துக் கருத்துரைத்த ஜொகாரி, அங்கு எந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டாலும் அது அங்குள்ள குடியிருப்பாளர்களுக்குக் கட்டுப்படியாக இருப்பது முக்கியம் என்றார்.
“அங்கு கட்டுப்படி ஆகாத விலைமிகுந்த கொண்டோமினியம்கள் கட்டப்படுவதை நாங்கள் விரும்பவில்லை”, என்று அவர் ஸ்ரீபெர்லிஸ் 2 பொது வீடமைப்புத் திட்டத்தின் குடியிருப்பாளர்களிடையே பேசியபோது கூறினார்.
இரண்டாம் நிலை நிதி அமைச்சருமான ஜொகாரி, அப்பகுதியில் குறைந்த வருமானம் பெறுவோருக்கான திட்டங்கள்தாம் மேற்கொள்ளப்படும் என கோலாலும்பூர் மாநாகராண்மைக் கழகமும் பிரதமரும் தம்மிடம் தெரிவித்திருப்பதாக சொன்னார்.
“அப்பகுதியை மேம்படுத்த விரும்புவோர் அப்பகுதி குடியிருப்பாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவது முக்கியம்”, என்றார்.
குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார்.
“பல இடங்களுக்கும் மாற்றப்படலாம்” என்று குடியிருப்பாளர்கள் கவலை கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
“40 ஆண்டுகளாக அங்கு இருந்து விட்டதால் அங்கிருந்து வெளியேறுவது குறித்து அவர்கள் கவலையுறுவது இயல்புதான்” என்றார்.