பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்பி, தமக்கு எதிராக அவதூறு கூறும் கட்டுரை வரைந்த ராஜா பெட்ரா கமருடின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளார்.
அரசாங்க ஆவணங்கள் ராஜா பெட்ரா நொடித்துப் போனவர் என்று காண்பித்தாலும் உண்மையை நிலைநாட்ட சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றவர் சொன்னார்.
“வெற்றி பெற்றால் எந்த இழப்பீட்டையும் என்னால் கோர முடியாது. வழக்குச் செலவைக்கூட நானேதான் கொடுக்க வேண்டியிருக்கும்.
“நான் பணத்தை எதிர்பார்க்கவில்லை. எனக்குத் தேவை உண்மை”, என்று ரபிசி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
ரபிசி குறிப்பிடும் கட்டுரை ஏப்ரல் 7-இல் ராஜா பெட்ராவின் மலேசியா டுடே வலைப்பதிவில் வெளியிடப்பட்டிருந்தது. அதில், ரபிசிக்கும் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நாசுத்தியோனுக்கும் ஒரு வணிகரான ஜான் சோ சீ வென் ரிம20 மில்லியன் கொடுத்தார் என்று கூறப்பட்டிருந்தது.
இக்கூற்றில் உண்மை இல்லை என்று கூறிய ரபிசி, எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சென். பெர்ஹாட்டின் பணம் முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நஷருடின் மாட் இசாவுக்குச் சென்றுள்ளதாக தாம் செய்துள்ள சத்திய பிரமாணத்துக்கு எதிர்வினை ஆற்றும் பாஸ் தலைவர்கள் ராஜா பெட்ராவின் கூற்றைக் கிளிப்பிள்ளைகள்போல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.