ரபிசி: ‘குதப்புணர்ச்சி II எஸ்டி’ விசயத்தில் நிக் அமார் குழம்பிப் போயுள்ளார்

nik amarபாஸ்    உதவித்    தலைவர்    நிக்   அமார்  நிக்   அப்துல்லாவுக்கு    நினைவுகூறும்   ஆற்றல்   மங்கி  விட்டதுபோல்   தெரிகிறது    என்கிறார்  பிகேஆர்   உதவித்   தலைவர்   ரபிசி   ரம்லி.

அன்வார்   இப்ராகிமின்    குதப்புணர்ச்சி  II   வழக்கில்      சத்திய  பிரமாண  வாக்குமூலம் (எஸ்டி)  தாக்கல்   செய்யப்பட்டதாக    அவர்  கூறுவதை  வைத்துதான்  ரபிசி   இவ்வாறு   கூறினார்.

நிக்  அமார்   அண்மையில்,  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்    நிறுவனத்திலிருந்து     பாஸ்  கட்சியின்  முன்னாள்    துணைத்    தலைவர்    நஸ்ருடின்   மாட்   இசாவுக்குப்  பணம்  கொடுக்கப்பட்டிருப்பதாக   ரபிசி  செய்துள்ள   சத்திய  பிரமாணத்துக்கு  முக்கியத்துவம்   கொடுக்க   வேண்டியதில்லை  என்றார்.

ரபிசியின்  எஸ்டியை  ஏற்றுக்கொண்டால்   முகம்மட்  சைபுல்   புகாரி   அஸ்லான்,   பேங்க்   நெகாரா   முன்னாள்   உதவி   கவர்னர்     அப்துல்   முராட்   காலிட்    ஆகியோரின்  எஸ்டிகளையும்   ஏற்றுக்கொள்ள    வேண்டியிருக்கும்  என்று   நிக்   அமார்   கூறியிருந்தார்.

அதற்கு  ரபிசி,   குதப்புணர்ச்சி   வழக்கில்   சைபுள்   எஸ்டி   எதுவும்  செய்யவில்லை    என்றும்   போலீஸ்  புகார்  மட்டுமே   செய்தார்    என்றும்  விளக்கமளித்தார்.

“அவர்   செய்தது    எஸ்டி   அல்ல.  எஸ்டி  பொய்யானால்   தண்டனை  கடுமையாக   இருக்கும்”,  என்று  ரபிசி   இன்று  ஓர்    அறிக்கையில்   கூறினார்.

குதப்புணர்ச்சி   வழக்கில்    சத்திய  பிரமாணம்    செய்தவர்   புஸ்ரவி  மருத்துவமனை   மருத்துவர்    டாக்டர்   முகம்மட்  ஒஸ்மான்    அப்துல்   ஹமிட்.  அவர்தான்  சைபுலைப்  பரிசோதனை   செய்தவர்.

“குதம்   வழக்கமான  நிலையில்   இருந்தது,  இரத்தக்கசிவு  இல்லை,  காயமில்லை,  கிழிந்திருக்கவில்லை,  வழக்கத்துக்கு   மாறாக    எதுவுமில்ல்லை”,   என்று  அவரது  மருத்துவ   அறிக்கை   கூறிற்று.

முகம்மட்  ஒஸ்மான்    தம்   சத்திய  பிரமாணத்திலும்   சைபுலுக்குச்  செய்த  சோதனைகளை   நினைவுகூர்ந்தார்.

ஆனால்,  அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி   வழக்கில்    முக்கிய   ஆதாரங்களான   முகம்மட்   ஒஸ்மானின்   மருத்துவ    அறிக்கையையும்   எஸ்டியையும்   நீதிமன்றங்கள்   புறந்தள்ளி  விட்டதாக   ரபிசி   கூறினார்.

“போலீசார்   முகம்மட்  ஒஸ்மான்மீது   நடவடிக்கை   எடுக்கவுமில்லை.  அப்படியானால்   அது   உண்மையாகத்தானே   இருக்க  வேண்டும்”, என்றார்.