ஈப்போ, சிமோர், கந்தானைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 20 பேர் நேற்று காலை (17.04.2017), கிந்தா விவசாய இலாகா அலுவலகத்தின் முன் மறியலில் ஈடுபட்டனர். 2014 முதல், கிந்தா விவசாய இலாகாவினால் மானியமாக வழங்கப்படும் உரம் , தங்களின் விவசாயத்திற்கு ஏற்புடையதாக இல்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
“அவர்கள் வழங்கும் கரிம உரம் (baja organic) NPK 5-5-5, எங்களின் காய்கறி விவசாயத்திற்கு ஏற்புடையதாக இல்லை. இந்த உரத்தைப் பயன்படுத்தினால், நாங்கள் எங்களின் உற்பத்திப் பொருளை வெளியாக்க கூடுதல் நாள்கள் ஆகின்றன. இதனால், எங்களுக்கு நஸ்டம் ஏற்படுகிறது,” என கந்தான் விவசாயிகளின் பிரதிநிதி தான் தியேன் சீ கூறினார்.
கிந்தா விவசாய இலாகாவிடம் மாற்று உரம் கேட்டு விண்ணப்பித்ததாகவும் ஆனால், இதுவரை அது வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், மஞ்சோய் சட்டமன்ற உறுப்பினருக்கும் இதுகுறித்து கடிதம் அனுப்பியதாகவும் ஆனால், அவரிடமிருந்தும் தங்களுக்குச் சாதகமான எந்தவொரு பதிலும் வராததால், இந்த மறியலில் ஈடுபட்டதாக விவசாயிகள் எங்களிடம் தெரிவித்தனர்.
கடந்தாண்டு நவம்பரில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் இது தொடர்பாகப் பேசியுள்ளார். “பல விவசாயிகள் அரசாங்கம் வழங்கும் உரத்தைத் தங்கள் பயிர்களுக்குப் பயன்படுத்துவதில்லை. அதனால், விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்குவதைவிட, விவசாயத்துறை அமைச்சு அவர்களுக்குச் சான்றுச் சீட்டு (voucher) திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தால், அவர்களுக்குத் தேவையான உரத்தை, அவர்களே தேர்ந்தெடுத்து வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்,” என டாக்டர் ஜெயக்குமார் தனது விவாதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, “பேராக் மாநிலத்தை நாட்டின் உணவு உற்பத்தி நிறுவனமாக உருவாக்க , மாநில மந்திரி புசார் எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை மாநில அரசின் மேம்பாட்டுத் திட்டங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்,” என்று பேராக் விவசாயம் கால்நடை ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தெரிவித்தார்.