பாஸ்தான் மலாய்க்காரர்களைப் பிளவுபடுத்தியது என்று கூறும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவ்வாறு குற்றம் சாட்டுவதற்கு முன்பு தம்மை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது நல்லது என பாஸ் உதவித் தலைவர் இட்ரிஸ் அஹமட் சாடினார்.
மகாதிர் பிரதமராக இருந்த 22-ஆண்டுக் காலத்தில் மலாய் சமூகத்தைப் பிளவு படுத்தும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என இட்ரிஸ் கூறினார்.
“உங்கள் ஆட்சியில் மலாய் சமூகம் பிளவுபட வில்லையா, துன்? நீங்கள் ஆட்சியில் இருந்த 22 ஆண்டுகளில் மூன்று துணைப் பிரதமர்கள் தூக்கி எறியப்பட்டார்கள். ‘ஏ டீம்’, ‘பி டீம்’ உருவானது, அம்னோ சட்டவிரோத கட்சி என்று அறிவிக்கப்பட்டது.
“செமங்காட் 46, பிகேஆர் உருவானது உங்கள் காலத்தில்தான். திரெங்கானுவுக்குக் கிடைத்த வந்த எண்ணெய் உரிமப் பணம் ரத்தானதும் உங்கள் காலத்தில்தானே?”, என்று இட்ரிஸ் வினவினார்.