பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து), பினாங்கில் கப்பலா பத்தாஸ், தாசெக் குளுகோர், பாலேக் பூலாவ் ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள்மீது கண் வைத்துள்ளது.
அத்தொகுதிகள் இப்போது அம்னோ வசமுள்ளன. ஆனால், அத்தொகுதிகளில் அம்னோ வலுவாக இல்லை என்று கூறிய பினாங்கு பெர்சத்து தலைவர் மர்சுகி யஹயா, அத் தொகுதிகளில் அம்னோவை எதிர்க்க தம்முடைய கட்சி தயாராக உள்ளதாகக் கூறினார்.
“அவற்றை எங்களுக்குக் கொடுப்பது பற்றி பக்கத்தான் ஹராபான் தலைவர் மன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் அங்கு வெற்றிபெற நல்ல வாய்ப்பு உள்ளது. அங்கு அரசியல் நிலவரம் அம்னோவுக்குச் சாதகமாக இல்லை”, என மர்சுகி கூறினார்.
“அண்மையில் நாங்கள் அப்பகுதிகளுக்குச் சென்றபோது நல்ல வரவேற்பு கிடைத்தது”, என்றாரவர்.
தாசெக் குளுகோர், கப்பலா பத்தாஸ் உள்பட 31 நாடாளுமன்றத் தொகுதிகளில் அம்னோ தோற்கும் சாத்தியம் உள்ளதாக அவர் சொன்னார். கடந்த பொதுத் தேர்தலில் அத் தொகுதிகளில் சொற்ப பெரும்பான்மையில் அம்னோ வெற்றி பெற்றது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில், கேமரன் மலை தொகுதியில் பாரிசான் சார்பாக அம்னோ வேட்பாளர் போட்டியிட உள்ளார். (36% மலாய்க்காரர்கள், 30% சீனர்கள், 20% பூர்வகுடி, 13% தமிழர்கள்.) இதனால் இத்தொகுதியில் பக்காத்தானின் பெர்சத்து கட்சியும் கண் வைத்துள்ளது என்பது இரகசியமான ஒன்று.