தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் மே தினப் பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது

 

Maydaymarchமே தினம் உலகத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறைசாற்றும் நாள். எதிர்வரும் மே தினத்தன்று கோலாலம்பூரிலுள்ள கேடிஎம்பி தலைமையகத்திலிருந்து புக்கிட் பிந்தாங்கிற்கு மே தின பேரணி நடத்துவதற்கு பல அரசுசார்பற்ற அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

திட்டமிடப்பட்டுள்ள இப்பேரணியின் கருப்பொருள் “ஆள்குறைப்பு தொழிலாளர்களைத் துன்பத்தில் ஆழ்த்துகிறது: தொழிலாளர்கள் ஆள்குறைப்பு (இன்சூரன்ஸ்) திட்டம் இப்போதே”, என்று கூறிய இப்பேரணியின் ஏற்பாட்டாளரும் ஒருங்கிணப்பாளருமான இ. நளினி, இப்பேரணியின் நோக்கம் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு ஓர் ஆள்குறைப்பு திட்டத்தை உருவாக்குவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் அளிப்பதாகும் என்றார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்கள் இன்சூரன்ஸ் திட்டம் ஏன் மீண்டும் தள்ளிப் போடப்பட்டது என்று நளினி வினவினார்.

இத்திட்டம் 2009 ஆம் ஆண்டில் விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில், துணை மனிதவள அமைச்சர் இஸ்மாயில் அப்துல் முத்தாலிப் கடந்த மார்ச் நாடாளுமன்ற தொடர்கூட்டத்தில் இத்திட்டம் தாக்கல் செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தார் என்று மேலும் கூறினார்.

இந்த இன்சூரன்ஸ் திட்டம் ஆள்குறைப்புக்கு ஆளாகும் தொழிலாளர்கள் வறுமையில் சிக்கி பாழடைந்து போகாமல் தடுப்பதற்கான ஒரு பாதுகாப்பு வலையாகும் என்றாரவர்.

இந்தப் பிரச்சனையின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஏற்பாட்டாளர்கள் இதை மே தினக் கொண்டாட்டத்தின் மிக முக்கிய கோரிக்கையாக முன்வைத்துள்ளனர் என்று நளினி மேலும் கூறினார்.

மேலும், பெண் தொழிலாளர்களின் உரிமையையும் நளினி வலியுறுத்தினார். வேலை இடங்களில் காணப்படும் வேறுபாடுகளும் தொல்லைகளும் அகற்றப்பட வேண்டும் என்பதோடு பெண் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரிம1,500 ஆக இருக்க வேண்டும் என்றார் நளினி.

இவை மட்டுமல்ல, வெளிநாட்டுத் தொழிலாளர்கள், ஓராங் அஸ்லிகள் ஆகியோரின் உரிமைகளோடு, சுயேட்சையான, நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுதல், குற்றச் செயல் தடுப்புச் சட்டம் 1959, பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012, தேச நிந்தனைச் சட்டம் 1948 மற்றும் இதர அடக்குமுறைச் சட்டங்கள் அகற்றப்படுதல் ஆகியவற்றுக்காகவும் இக்குழுமத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஜாரிஙான் ரக்யாட் தெர்டின்டாஸ், சுவாராம், சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம், இலவசக் கல்வி இயக்கம், பெண்கள் உதவி மன்றம், சிஸ்டர்ஸ் இன் ஜஸ்டிஸ் மற்றும் மலேசிய சோசியலிசக் கட்சி ஆகியவை இந்நிகழ்ச்சில் பங்கேற்கும் அரசுசார்பற்ற அமைப்புகளில் அடங்கும்.