ஊராட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் உள்ள பிஎன் தோற்றுப்போன நாடாளுமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்படும் அரசாங்கத் திட்டங்களை நிறுத்தி வைக்க ஊராட்சி, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சு எடுத்துள்ள முடிவு சிலாங்கூரில் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணாது.
ஏனென்றால், அம்மாநிலம் 2008-இலிருந்து கூட்டரசு நிதி என்று எதையும் பெற்றதில்லை என சிலாங்கூரில் ஊராட்சிக்குப் பொறுப்பாக உள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் இயன் யோங் வா கூறினார்.
மாறாக, கூட்டரசுப் பணம் பிரதமர்துறையின் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு(ஐசியு)க்கு அனுப்பப்படுகிறது.
“பிஎன் மாநிலங்களில் ஊராட்சி அமைப்புகள் கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து நேரடியாக நிதி பெறும்.
“எதிரணி மாநிலங்களில் கூட்டரசு திட்டங்களை ஐசியுதான் மேற்கொள்ளும் ஊராட்சி அமைப்புகள் அல்ல”, என இயன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
சிலாங்கூரில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு பெரும்பகுதி மாநில அரசுதான் நிதியுதவி செய்கிறது என அந்த ஸ்ரீகெம்பாங்கான் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.
“சிலாங்கூரில் எத்தனை கூட்டரசுத் திட்டங்கள் உள்ளன என்பது எங்களுக்குத் தெரியாது, ஏனென்றால் அந்த விவரங்களை அவர்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை”, என்றாரவர்.