புவாக்கு எதிராக நஜிப் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்

 

najibsuespuaடிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 1965 (சட்டம் 355) பற்றி வெளியிட்டிருந்த அறிக்கை மற்றும் முகநூல் வீடியோ கிளிப் ஆகியவற்றுக்கு எதிராக அவர் மீது பிரதமர் நஜிப் ரசாக் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கு கோலாலம்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் 11 இல், மலேசியாகினி வெளியிட்டிருந்த ஒரு செய்தியில் புவாவிடமிருந்து நஜிப் மன்னிப்பு கோரியதுடன் அவதூறானது என்று கருதப்படும் அந்த வீடியோ கிளிப்பை அவர் திரும்பப் பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

புவாவிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தில் அக்குறிப்பிட்ட வீடியோ கிளிப் நஜிப் திருடியிருப்பதோடு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று மறைமுகமாகக் குறிப்பிடுகிறது என்று நஜிப்பின் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

புவாவின் அவதூறு அறிக்கைகளுக்கு மாறாக நஜிப் கொடுங்கோலாட்சி புரியவர் அல்ல, கொடுமையான கொள்ளைக்கார ஆட்சியாளர் அல்ல, குறைகூறல்களைத் தவிர்ப்பவர் அல்ல, ஊழல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர் அல்ல, மக்களின் பணத்தைத் திருடுபவரும் அல்ல என்று நஜிப்பின் வழக்குரைஞர் முகமட் ஹஃபாரிஸாம் ஹருன் அவரது கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நஜிப்புக்கு எதிராக புவா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்பதோடு அவை போலியான குற்றச்சாட்டுகளாகும் என்று கூறிய நஜிப்பின் வழக்குரைஞர், இவ்வாறு செய்வதில், புவா முன்கூட்டியே திட்டமிட்ட தீய நோக்கத்துடன் செயல்படுகிறார் என்று கோரிக்கை கடிதத்தில் கூறியுள்ளார்.