மே தினப் பேரணி நடத்தக்கூடாது, போலீஸ் எச்சரிக்கை; நடத்துவோம் என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்

 

Maydaymarchpolicewarningமே 1 இல், மே தினப் பேரணி நடத்தக்கூடாது என்று பேரணி ஏற்பாட்டாளர்களை போலீஸ் எச்சரித்துள்ளது.

ஆனால், அப்பேரணியின் ஏற்பாட்டாளர்கள் அது நடந்தே தீரும் என்று கூறுகின்றனர். இது ஒவ்வொரு ஆண்டும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடத்தப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.

பேரணி நடத்தக்கூடாது என்று தீர்மானித்ததற்கு காரணம் ஏற்பாட்டாளர்கள் சட்டத்தின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத் தலைவர் முகமட் சுக்கிரி கூறினார்.

பேரணியை நடத்தக்கூடாது என்று தாம் ஏற்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறிய அவர், கூட்டம் நடத்தப்படும் இடங்களின் சொந்தக்காரர்களிடமிருந்து அனுமதி பெறவில்லை. இது செக்சன் 10 (சி), அமைதியான ஒன்றுகூடல் சட்டம் 2012 ஐ மீறியதாகும் என்றாரவர்.

ஆகவே, அவர்கள் பேரணியை நடத்தக்கூடாது, மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுக்கிரி மேலும் கூறினார்.

இது குறித்து கருத்துரைத்த மலேசிய சோசியலிசக் கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினர் எஸ். அருட்செல்வம், ஒவ்வொரு ஆண்டும் போலீசுக்கு இது பற்றி தெரிவிக்கிறோம். ஆனால், இப்போது போலீஸ் இதை பிரச்சனையாக்கியுள்ளது ஏனென்றால் பேரணி சென்றடையும் இடம் புக்கிட் பிந்தாங்.

“நாங்கள் அங்குள்ள கடைகளிடமிருந்தும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்திடமிருந்தும் அனுமதி பெற வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

கடந்த 23 ஆண்டுகளாக மே தினப் பேரணி நடத்தி வருகிறோம். நாங்கள் அனுமதி கேட்டதில்லை ஏனென்றால் நாங்கள் போலீசுக்கு தெரிவித்திருந்தோம் என்றார் அருட்செல்வன்.