பெர்லிஸ் முப்தியின் கவிதைக்கு எதிராக இந்து அமைப்புகள் போலீஸ் புகார்

 

perlismufti2நேற்று பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஸைனுல் அபிடின் அவரது முகநூலில் பதிவு செய்திருந்த கவிதைக்கு எதிராக 40 அரசுசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஆதரவாளர்களும் போலீஸ் புகார்கள் செய்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அந்த புகார்களில் இந்துக்களை முஸ்லிம்கள் வெறுக்க வைக்கும் நோக்கத்துடன் தேசநிந்தனை பேச்சை பேசியதாக அந்த முப்தி மீது குற்றம் சாட்டினர்.

முப்தி என்ற முறையில் முகமட் அஸ்ரிக்கு மற்ற சமயங்களை அவமதிக்கக்கூடாது என்று தெரிந்திருக்க வேண்டும் என்று அப்பிரதிநிதிகளின் பேச்சாளர் பி. இராஜரெத்தினம் கூறினார்.

அரசாங்கம் அந்த முப்தியை உடனடியாக அவரது பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று இராஜரெத்தினம் கேட்டுக்கொண்டார்.

“முப்தி மாநிலத்தின் மிக உயர்ந்த பதவி. அவர் சுல்தானுக்கும் மாநில அரசுக்கும் சமய விவகாரங்களில் ஆலோசனை கூறுபவர்.

“மிக உயர்ந்த பதவியில் அமர்ந்து கொண்டு மற்ற சமயங்களையும் மற்ற சம்பிரதாயங்களையும் சிறுமைப்படுத்தி பேசும் ஒருவரை நாம்Perlismufti1 எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என்று அவர் இன்று செந்துல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நாடுதழுவிய அளவில் முகமட் அஸ்ரியின் கவிதைக்கு எதிராகப் போலீஸ் புகார் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதி இந்தப் புகார் என்று கூறிய இராஜரெத்தினம், சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸக்கீருக்கு எதிராகவும் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

அப்புகார்களில் ஸக்கீருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

இன்று காலை, விளக்கம் அளித்த முப்தி முகமட் அஸ்ரி அவரது கவிதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நிருவாகத்தைப் பற்றி குறிப்பிடுகிறது, இந்துக்களைப் பற்றி அல்ல என்றார்.