மலேசிய சோசலிசக் கட்சியின் – பருவநிலை மீட்சிப் பேரணி

பி1சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு, நேற்று காலை, கேமரன் மலை தானா ராத்தாவில் ‘பருவநிலை மீட்சிப் பேரணி’ நடைபெற்றது. இதனை மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) பூர்வீகக்  குடிமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கானப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. 150-க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர், இவர்களில் அதிகமானோர் பூர்வீகக் குடிமக்கள்.

7-ம் ஆண்டாக, சர்வதேசப் பூமி தினத்தை பி.எஸ்.எம். தொடர்ந்து ஏற்பாடு செய்துவருவதாக, அதன் ‘பூர்வீகக் குடிகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு’க்கான ஒருங்கிணைப்பாளர் சுரேஸ்குமார் தெரிவித்தார்.

இப்பேரணி காலை 11 மணியளவில் தொடங்கியது. மேரிகோல்ட் சதுக்கத்தில் தொடங்கி , பேரி ஐ.ஜே. மையம் வரை சுமார் 1 கிமீ தூரம் வரை மக்கள், பதாகைகளை ஏந்திய வண்ணம் அமைதியாக நடந்துசென்றனர். வழிநெடுக சுலோகங்களைச் சொல்லியும், சுற்றறிக்கைகளை விநியோகித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

suresh“இவ்வாண்டுக்கான பூமி தினம், கரிமத்தைக் (CO2) குறைப்போம், காடுகளைப் பாதுகாப்போம் மற்றும் காடு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்குப் பாதுகாவலர்களாக விளங்கும் பூர்வீகக்  குடியினரின் உரிமைகளை மதிப்போம் எனும் 3 முக்கியச் செய்திகளை மக்களிடம் கொண்டு சென்றது,” என  சுரேஸ்குமார் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்ச்சியில், கிளாந்தான், பஹாங் மாநில அரசுகள் மற்றும் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சுக்கு கையளிக்க ஒரு கோரிக்கை மனுவும் தயாரிக்கப்பட்டிருந்தது. விரைவில் அந்தக் கோரிக்கை மனுவும் மக்கள் கையெழுத்திட்ட பதாகையும் குறிப்பிட்டவர்களிடம் சமர்ப்பிக்கப்படும் என சுரேஸ் தெரிவித்தார்.

பி2“உணவு, சுத்தமான குடிநீர், சுகாதாரம், ஆரோக்கியம், வசதியான வீடு, ஆடை, கல்வி, கலாச்சாரம் மற்றும் மனமகிழ் நடவடிக்கைகள் என அனைவருக்கும் கண்ணியமான வாழ்வுமுறையை உருவாக்கித்தர வேண்டும். பொறுப்பில் இருப்பவர்கள் மூலதனம், நிதி மற்றும் பொருள் உருவாக்கத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல்; இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் வழிவகைகளையும் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். மேலும், இயற்கை வளத்தை மேலாண்மை செய்யும் அமைச்சு, இந்தக் கரிம வெளிபாட்டைக் குறைக்கவும் ஆவன செய்ய வேண்டும்,” என்றார்.

பூர்வீகக்  குடிகளை  மேம்படுத்துவோம், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்தை உறுதி செய்வோம், அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகளை ஜனநாயக முறையில் எடுப்பதை ஊக்குவிப்போம்,   மக்கள் மற்றும் இயற்கை சூழலைப் பாதுகாக்காத அரசியல் பிரதிநிகளைப் பதவி நீக்கம் செய்வோம் , சுற்றுச் சூழலுக்காகப் போராட எல்லைகள் கடந்து மனிதர்களை ஒருங்கிணைப்போம் போன்றவை உட்பட 15 கோரிக்கைகள்  2017 சர்வதேச பூமி தினத்தில் கையெழுத்திடப்பட்டது