பக்கத்தான் ஹராபான் கூட்டணியில் முதன்மைக் கட்சி, ஆதிக்கம் செலுத்தும் கட்சி என்று எதுவும் கிடையாது என அதன் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லா கூறினார்.
இன்று கோலாலும்பூர் கூட்டரசுப் பிரதேச பக்கத்தான் ஹராபான் மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய சைபுடின், விரைவில் வருமென்று எதிர்பார்க்கப்படும் 14வது பொதுத் தேர்தலில் ஒரே அணியாக போட்டியிடுவதே பங்காளிக் கட்சிகளின் வியூகத் திட்டமாகும் என்றார்.
“பக்கத்தான் ஹராபானில் ஆதிக்கம் செலுத்தும் பங்காளிக் கட்சி இல்லை. அதற்கு இங்கு இடமில்லை. அது பாரிசான் நேசனல் வழி.
“அதுவும் கூட்டணிதான், இதுவும் கூட்டணிதான். ஆனால், பக்கத்தான் ஹராபானில் யாரும் மேலாதிக்கம் செலுத்துவதில்லை”, என சைபுடின் இன்று செராஸில் பிகேஆர், டிஏபி, அமனா, பெர்சத்து ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 250 பேராளர்களிடையே உரையாற்றியபோது கூறினார்.
ஹராபான் கட்சிகள் 14வது பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வருவதாகவும் அவர் சோன்னார்.
ஹராபான் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்று குறிப்பிட்ட சைபுடின் அது பிஎன்னின் இனத்தை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைபோல் இருக்காது என்றார். இங்கே கட்சிகள் மக்களுக்கு உதவுவதற்காக தங்களுக்குள் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்ளும் .