பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட்டை அவமதிக்கும் முகநூல் பதிவு குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
‘Otai Bersih’ என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒரு தரப்பின் முகநூல் பக்கத்தில் அப்பதிவு காணப்பட்டது. ‘Otai’ என்பது மூத்தோர் அல்லது அனுபவமிக்கவர்கள் என்பதைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல்.
அமைச்சரின் மூத்த தனிச் செயலர் ஷைரில் அன்வார் அக்மால் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் நேற்று அப்புகாரைச் செய்தார்.
“அதே போன்ற புகார் ஒன்று இன்று காலை மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்திடமும் செய்யப்பட்டது.
“சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டது”, என ஷைரில் அஸலினாவின் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா ‘Otai Bersih’-க்கும் தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே-க்கும் எந்தத் தொடர்புமில்லை என்றார்.azalina
“பெர்சே என்ற பெயரைக் கொண்ட பொய்யான முகநூல் பக்கங்கள் நிறையவே உள்ளன. அவற்றில் எழுதப்படுவதற்கும் பதிவிடப்படுவதற்கும் எங்களைப் பொறுப்பாக்க முடியாது”, என மரியா மலேசியாகினியிடம் கூறினார்.