காஜாங் மெஜிஸ்திரேட் நீதிமன்றம், மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டிலிருந்து மலேசிய குற்றச்செயல் கண்காணிப்புப் பணிக்குழு (மைவாட்ச்)த் தலைவர் ஆர். சஞ்சீவனை இன்று விடுவித்தது.
அவர்மீது புகார் செய்தவர் விவகாரத்தைத் தொடர விரும்பாததால் புத்ரா ஜெயா போலீஸ் தலைமையகம் வழக்கைக் கைவிட அவர் விடுவிக்கப்பட்டார்.
வழக்கை மட்டுமே தள்ளுபடி செய்ய வேண்டும் சஞ்சீவனைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டு தாம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக அரசுத்தரப்பு வழக்குரைஞர் மெகாட் மகாதிர் அப்பெண்டி கூறினார் என உத்துசான் ஆன்லைன் அறிவித்துள்ளது.
ஆனால், சஞ்சீவனின் வழக்குரைஞர் எஸ். பிரகாஷ், சஞ்சீவனைக் குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் என்று மனுச் செய்தார்.
அதை ஏற்று மெஜிஸ்திரேட் நொராபிடா இட்ரிஸ் சஞ்சீவன் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.