மலேசிய இந்தியர் பெருந்திட்டம் ஓர் அரசியல் கண்துடைப்பு, குலா கூறுகிறார்

Kula– மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஏப்ரல் 25, 2017.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்த மலேசிய இந்தியர் பெருந்திட்டம் ஓர் அரசியல் கண்துடைப்பு என்று இந்தியச் சமூகம் கருதுவதற்கு காரணங்கள் நிறைய உண்டு.

இந்நாட்டு இந்தியர்களை மேம்பாடடையச் செய்வதற்காக ஒரு பில்லியன் ரிங்கிட்டுக்கும் கூடுதலான நிதி இத்திட்டத்தின் வழி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

இது வெற்றுப் பேச்சல்ல என்றும், பொதுத் தேர்தல் சம்பந்தப்பட்டதல்ல என்று அவர் கூறிக்கொண்டார்.

கேட்பதற்கு மகிழ்ச்சியூட்டுகிற இம்மாதிரியான அறிவிப்புகளை பாரிசான் நேசனல் அரசாங்கம் தேர்தல் நெருங்கும் காலத்தில் செய்வது அனைவரும் அறிந்ததே. இந்தப் பெருந்திட்ட அறிவிப்பும் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக செய்யப்பட்டதே. வரப்போகும் பொதுத் தேர்தலில் பிஎன் மிக மோசமான வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும்.

பிஎன் அரசாங்கம் உண்மையிலேயே இந்தியச் சமூகத்திற்கு உதவும் நோக்கத்தைக் கொண்டிருந்திருக்குமேயானால், அச்சமூகம் நீண்டகாலமாக எதிர்க்கொண்டிருக்கும் பொருளாதார, சமூக, கல்வி, வீடு மற்றும் வேலை வாய்ப்புகள் போன்ற பிரச்சனைகளை இன்னமும் எதிர்கொண்டிருக்க வேண்டியதில்லை.

நாடற்ற இந்தியர்களின் பிரச்சனை என்றோ தீர்க்கப்பட்டிருக்க வேண்டும்!

Time magazine: “Disgruntled underclass”

மலேசிய இந்தியர்களைப் பற்றி டைம் இதழ் 2000 ஆண்டில் வெளியிட்டிருந்த ஒரு கட்டுரையில் அவர்களை “ஏமாற்றமடைந்த கீழ்மட்டத்தினர்” என்று வர்ணித்திருந்ததுடன் அவர்களில் பலர் தங்களை “மூன்றாம்-தர குடிமக்கள்” என்றும், 1970 ஆம் ஆண்டில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து “உண்மையிலேயே “இழப்புக்கு ஆளானவர்கள்” என்றும் கருதினர் என்று எழுதியுள்ளது.

17 ஆண்டுகள் கடந்து விட்டன: இந்தியச் சமூகம் சிறப்படைந்துள்ளதா? அரசாங்கம் என்ன செய்துள்ளது?

அரசாங்கத்திற்கு இந்தியர்களின் ஆதரவு வேண்டுமென்றால், கடந்த பொதுத் தேர்தலிலிருந்து இதுவரையில் அது சாதித்ததை முன்வைக்க வேண்டும்.

சரி போகட்டும். இந்தப் பெருந்திட்டத்தை ஆற்றலுடன் செயல்படுத்தி இந்தியர்கள் உண்மையிலேயே பலனடைவார்கள் என்பதை எப்படி பிரதமர் உறுதிப்படுத்தப் போகிறார்?

இந்தியர்களுக்கு உதவுவதற்கான அவரது கடந்தகால முயற்சிகள் சமூகத்தின் அடிமட்ட மக்களுக்குச் சென்றடையவில்லை என்றும், ஆகவே ஒரு பெருந்திட்டம் தேவைப்படுகிறது என்றும் மஇகாவின் 70 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய போது நஜிப் கூறியிருக்கிறார்.

இந்தப் பெருந்திட்டம் இந்தியருக்களுக்கு உதவும் அரசாங்கத்தின் கடந்தகால தோல்வியைப் பிரதிபலிக்கிறதா?

இப்பெருந்திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் சிறப்புக்குழுவின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். micpledgeஅதன் வழி இப்பெருந்திட்டத்தின் செயல்பாடு மற்றும் அதன் திட்டம் அடைந்துள்ள முன்னேற்றம் போன்றவற்றை ஆய்ந்தறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

இந்தப் பெருந்திட்டத்தின் அமலாக்கம் மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியத்தின் தலைமையிலான ஒரு செயற்குழுவால் மேற்பார்வை செய்யப்படும் என்று நஜிப் கூறினார்.

அந்த அறிவிப்பு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை. சுப்ரமணியத்தின் தலைமையில் சிறப்பு அமலாக்கப் பணிப்படை (SITF) 4 ஆண்டுகளுக்கு இருந்தது. அதன் பலன் என்ன? உறுதியான எதுவும் மக்களிடம் சென்றடையவில்லை.

ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட இந்தப் பெருந்திட்டம் ஓர் அரசியல் கண்துடைப்பு என்று இந்தியச் சமூகம் கருதுவதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. இது நிச்சயமாக ஒரு தேர்தல் தந்திரமேயன்றி வேறொன்றுமல்ல!