3,000 குடியுரிமை மனு பாரங்கள் 3 வருடங்களாக உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் கிடக்கின்றன

 

Najibblueprintகடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 24), 2,000 பேர்களின் முன்னிலையில் இது வெட்டிப் பேச்சல்ல, இது நிஜம் என்று கூறி அடுத்தப் பத்தாண்டுகளுக்கான இந்தியர்கள் பெருந்திட்டத்தை (MIB)பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்தார்.

இப்பெருந்திட்டத்தை அமலாக்கம் செய்யும் குழுவிற்கு மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் தலைமை ஏற்பார் என்றும் பிரதமர் அறிவித்தார்.

இந்தியர்களின் மேம்பாட்டிற்காக வரையப்பட்டிருக்கும் பெருந்திட்டத்தைப் பட்டியலிட்ட பிரதமர் நஜிப், மலேசியாவில் நாடற்றவர்களாக இருக்கும் இந்தியர்களைப் பற்றி குறிப்பிட்டார். நாட்டில் சுமார் 20,000 லிருந்து 25,000 வரையிலான இந்தியர்கள் குடியுரிமை இல்லாமல் இருக்கிறார்கள். “அவர்களின் உரிமையை நாம் மறுக்கக்கூடாது”, என்று நாடற்றிருக்கும் இந்தியர்களுக்காகப் பேசினார்.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, (ஜூன் 2010), இந்தியர்களின் மேம்பாட்டிற்காக பிரதமர் “சிட்” (Special Implementation Taskforce) என்ற பணிப்படையை உருவாக்கி அதற்கும் டாக்டர் எஸ். சுப்ரமணியத்தை தலைவராக நியமித்தார். அதன் செயலாளராக டெனிசன் ஜெயசூரியா நியமிக்கப்பட்டார். ஏழாண்டுகளுக்குப் பிறகு நஜிப் அவர்களை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார், இந்தியர்களின் குடியுரிமை மறுக்கப்படக்கூடாது என்பதற்காக இருக்கலாம்!
3,000 குடியுரிமை மனுப் பாரங்கள்
3,000 குடியுரிமை மனு பாரங்கள் கடந்த மூன்று வருடங்களாக உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் அந்த அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்துக்கிடக்கின்றன என்று கூறப்படுகிறது. அந்த குடியுரிமை மனு பாரங்கள் அனைத்தும் தீர்க்கமாக சரிபார்க்கப்பட்டவை. அமைச்சர் அவற்றுக்கு ஓகே என்று சொல்ல வேண்டும், அவ்வளவுதான். அடுத்த வாரம் தீர்க்கப்பட்டு விடுமா? நஜிப் அதை மறுக்காமல் செய்வாரா? சுப்ரா அதை அறிவிப்பாரா?