வழங்கப்பட்டுள்ள 1.75 மில்லியன் குடியுரிமைகளை மறுஆய்வு செய்யக் கோரிக்கை விடுகிறது மலாய்-முஸ்லிம் கூட்டணி

 

citizenshipreviewமலேசியர்களுக்கு 1957 ஆம் ஆண்டிற்கும் 1970 ஆம் ஆண்டிற்கும் இடையில் சுமார் 1.75 மில்லியன் குடியுரிமைகள் வழங்கப்பட்ட நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்ப ஒரு புதிய மலாய்-முஸ்லிம் கூட்டணி திட்டமிட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.

பாரிசான் பெர்திண்டாக் மிலாயு இஸ்லாம் (பெர்திண்டாக்) பேச்சாளர் முகமட் கைருல் அஸாம் அப்துல் அசிஸ் குடியுரிமை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறை பெடரல் அரசமைப்புச் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறினார்.

அரசமைப்புச் சட்டம் அட்டவணை 1 குடியுரிமைக்கு சத்தியம் செய்வது பற்றி குறிப்பிடுகிறது. 1957-1970 ஆம் ஆண்டுகளுக்கிடையில் வழங்கப்பட்ட 1.75 மில்லியன் குடியுரிமைகளுக்கு இந்த சத்தியம் செய்யும் நடைமுறை பின்பற்றப்படவில்லை.

ஆகவே, இது குடியுரிமை அளிப்பது, முன்பு மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு கொடுக்கப்பட்டது, பற்றி கேள்வி எழுப்ப இடமளிக்கிறது என்று அவர் கோலாலம்பூர் சுல்தான் சுலைமான் கிளப்பில் இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“இது ஒரு சட்டப் பிரச்சனை. இதை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். நீதிமன்றம் இதற்கு முடிவு செய்ய வேண்டும்”, என்றாரவர்.

இம்முடிவு அனைத்து இந்துக்களையும் இந்தியர்களையும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை என்று கூறும் பெர்திண்டாக், மலேசிய முஸ்லிம்களுக்கு எதிராக இன மற்றும் சமய உணர்வுகளைத் தூண்டிவிடுவதாகக் கூறப்படும் ஹிண்ட்ராப் இயக்கத்திற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.