ஸக்கீரின் தவறுகளை நிரூபியுங்கள் அல்லது நிறுத்துங்கள் சண்டையை என்கிறார் அஸ்ரி

 

mufti1இந்திய இஸ்லாமிய சமயப் போதகர் ஸக்கீரின் தவறுகளை நிரூபிக்குமாறு அவரை எதிர்க்கும் தரப்பினருக்கு பெர்லிஸ் முப்தி அஸ்ரி சைனுல் அபிடின் சவால் விட்டுள்ளார்.

இல்லை என்றால், மலேசிய முஸ்லிம்களும் இந்துக்களும் சண்டையை நிறுத்தி விட்டு இணக்கமான உறவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

“ஸக்கீர் நாய்க் பிரச்சனை மற்றும் இதர விவகாரங்களில் அனைத்து தரப்பினரும் இனம் மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட சினமூட்டும் செயல்களை நிறுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்”, என்று அஸ்ரி மேலும் கூறினார்.

ஸக்கீரின் அனுகுமுறை மீது அதிருப்தி கொண்டுள்ளவர்கள் மலேசியாவில் அவர் ஆற்றிய உரையால் சமயப் பதற்றம் ஏற்பட்டதற்கான ஆதாரத்தை காட்டினால், அது நிரூபிக்கப்பட்டால், நானும் கூட, அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பேன் என்று கூறிய அஸ்ரி, இல்லை என்றால், வேறுபட்ட சமயத்தினர்களாக இருந்தாலும் அன்புக் கரம் நீட்டி இணக்கம் காண்போம் என்று அவர் இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

இவ்வாறான முறைமை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆதாரம் ஏதுமின்றி கோரிக்கைகள் விடும் ஹிண்ட்ராப்பின் முறையைவிடச் சிறந்தது என்றாரவர்.